What’s wrong with our police ?

ஒற்றை வரியில் சொல்வதென்றால் இந்திய போலீஸ் காலனியாதிக்க போலீஸ் , தமிழ்நாட்டு போலீஸ் விதிவிலக்கல்ல .இதை அவர்கள் சாத்தான்குளம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயத்தில் நடந்துகொண்டதை வைத்து மட்டும் சொல்லவில்லை , உண்மையிலேயே போலீஸ்துறையின் ஒட்டுமொத்த கட்டுமானமுமே அப்படியானதுதான். ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் கீழ் நம் நாடு இருந்தபோதுதான் தான் இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்திய போலீஸ் சட்டம் கொண்டுவரப்பட்டது ,கிட்டத்தட்ட 160 வருடங்களுக்கு முன்.

ஆங்கிலேய அரசின் தேவைகளுக்கும் , வசதிக்கும் ஏற்ப எழுதப்பட்ட ஒரு சட்டத்தை தான் சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பயன்படுத்திவருகிறோம் . இந்த போலீஸ் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு முக்கிய காரணமே 1857 சிப்பாய் கலகம் தான். இது போன்ற கலகங்களையும் போராட்டங்களையும் ஒடுக்கவே ,ஆங்கிலேய அரசின் கைப்பாவையாக போலீஸ் செயல்பட இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது . இன்று நாம் அரசின் கைப்பாவையாக போலீஸ் செயல்படுவதாக குற்றம்சாட்டுவதில் எந்தப் பொருள் இல்லை , ஏனென்றால் அது ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டதே அதற்காகத்தான் . 

இதே போலீஸ் சட்டம் தான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது, தமிழகம் உட்பட. கேரளா , மஹராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் தத்தமது மாநில அளவில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளன ஆனால் அவையும் இந்த ஆங்கிலேய அரசு 1861 ல் உருவாக்கிய சட்டத்தை அடியொற்றி வந்தவையே.

இதை சீர்திருத்தும் பொருட்டு Model Police Act என்ற வரைவை தேசிய போலீஸ் ஆணையம் பரிந்துரை செய்தது . ஆனால் இது கூட முழுமையான வடிவில் சட்டமாக எங்குமே உருவெடுக்கவில்லை. இந்த பரிந்துரையில் போலீஸ் துறையின் வலிமையை கூட்ட என்ன யோசனைகள் உள்ளதோ அதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு போலீஸின் கடமைகள் என்னவாக இருக்க வேண்டும் என்று பிரிந்துரை செய்துள்ளதோ அதை மட்டும் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர் . 

அடிப்படையில் போலீஸ் என்பது மக்களை அடக்கி ஆளவும் ,வழிக்கு கொண்டுவரவும் பயன்படுத்தப்படும் ஆயுதம் என்ற காலனியாதிக்க மனோபாவம் சுதந்திரம் கிடைத்தபின்னும் மாறவே இல்லை . சுதந்திர இந்தியாவின் புதிய ஆட்சியாளர்களுக்கும் போலீஸ் துறையை மாற்றாமல் அப்படியே வைத்திருப்பது மிகவும் வசதியாக இருந்தது . பெரும்பாலான முதலமைச்சர்களும் போலீஸ் துறைய தங்கள் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே விரும்பினர்.

சரி , போலீஸ் துறை என்பது எப்படி இருக்க வேண்டும் ? 

காமல்வெல்த் மற்றும் நீடித்த ஜனநாயக மரபுடைய நாடுகள் என்னும் நோக்கில் இதை மூன்று வெவ்வேறு நாட்டு போலீஸ் துறைகளை ஒப்பிடுவோம். அவர்களில் முக்கிய குறிக்கோள் (mission ) என்ன என்று பார்ப்போம் 

ஆஸ்திரேலிய போலீஸ்:
To work with the community to reduce violence, crime and fear.

கனேடிய போலீஸ்:
To serve our province by protecting its citizens, upholding the law and preserving public safety.

தமிழ்நாடு போலீஸ் :
To work towards a safe, just, humane and progressive society.

இதில் கவனித்துப் பார்த்தால் தமிழ்நாடு போலீஸ் சிட்டிசன் சார்டரில் எங்குமே protect , serve போன்ற வார்த்தைகளே இருக்காது . அதிலும் கூட ஒரு குடிமகனின் கடமைகளும் பொறுப்பும் என்னெவென்றுதான் குறிப்பிடப்பட்டிருக்குமே தவிர ஒரு போலிஸ் அதிகாரியின் கடமையும் , பொறுப்பும் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்காது .இந்த துறையின் வடிவமைப்பில் அதை செலுத்தும் வழிகாட்டும் நெறிகளிலுமே நமக்கு மாற்றம் தேவையாக இருக்கிறது . இந்த துறையில் புதிதாக பணிக்கு சேரும் ஒரு காவலர் இந்த Institional structure & culture ஐ தாண்டி தனிப்பட்ட முறையில் பெரிதாக எந்த மாற்றமும் கொண்டுவந்துவிட முடியாது .

இது போக ரிபேரியோ கமிட்டி (1998) , பத்மநாபையா கமிட்டி (2000) என்று போலீஸ் துறை சீராக்கம் குறித்து நிறைய ஆராயப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கிறது ஆனால் நடைமுறையில் தான் ஒன்றும் நிகழவில்லை . இது போன்ற விஷயங்களில் எதிர்கட்சி ஆளும்கட்சி என்ற பாகுபாடெல்லாம் இல்லை எல்லா கட்சிகளும் இந்த சீர்திருத்தத்தை முடிந்த அளவு முடக்கவே முயன்று வந்துள்ளன . 

இந்த பரிந்துரைகளைகளை எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்டிலும் வழக்கும் தொடுக்கப்பட்டது . பொதுநல வழக்காக இதை தொடுத்தவரே ஒரு போலீஸ்காரார் , முன்னாள் DGP திரு,பிரகாஷ் சிங். சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் (2006 ) எல்லா மாநிலங்களும் இந்த பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டுமென்று ஆணையிட்டது .பல இழுபறிகளுக்குப் பின் 2013 ல் தான் Tamilnadu Police (Reform) Act 2013 வரப்பட்டது .அப்படியும் அந்த பரிந்துரைகளில் முக்கிய ஷரத்தான State Security Commission , என்ற அமைப்பு தமிழகத்தில் 2017 ல் தான் நிறுவப்பட்டது . 

இதன் நோக்கம் போலீஸ் துறையின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை கண்காணிப்பது ,போலீஸ்துறை மீதான குற்றச்சாட்டுகளை கையாள்வது , மாற்றங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவது . முக்கியமாக அரசுக்கும் போலீஸுக்கு இடையே ஒரு gatekeeper அல்லது buffer போல செயல்படுவது. புகழ்பெற்ற பிரகாஷ் சிங் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அறிவித்த ஏழு சீர்திருத்த நடவடிக்கைகளில் இது ஒன்று மட்டுமே. 

குறிப்பாக இந்த கமிஷனின் சுதந்திரம் காக்கப்பட வேண்டும் இதன் பரிந்துரைகளை ஏற்கப்பட வேண்டும் என்கிறது சுப்ரீம் கோர்ட் ஆனால் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட இந்த சீர்திருத்திய சட்டத்தில் அப்படி ஏதும் சொல்லபடவில்லை , அதாவது இந்த கமிஷனின் பரிந்துரைகள் ஆலோசனை அளவிலேயே எடுத்துக்கொள்ளப்படும் ( non-binding ) இந்த கமிஷனுக்கு முதல்வரே தலைவரா இருப்பார் அவரே போலீஸ் துறையின் மந்திரியாகவும் இருப்பார், பின்னர் எப்படி தலையீடற்ற செயல்பாடு சாத்தியம். ?

SSC ல் உறுப்பினர்களாக எதிர்கட்சி தலைவர் , முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் 5 சுதந்திரமான நபர்களை இருக்க வேண்டும் என்கிறது உச்ச நீதி மன்றம் . ஆனால் இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்கள் சிலவற்றையும் கேரளாவையும் தவிர எங்குமே இது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை . 

போலீஸ்துறையை அரசியல்வாதிகளில் பிடியில் இருந்து விலக்கி அவர்களை accountable ஆக ஆக்க முயலும் ஒவ்வொரு முன்னெடுப்பும் முடக்கப்படுகிறது , அப்படியே அமைக்கப்பட்டாலும் அதை எவ்வளவு வலுவில்லாமல் வைக்க முடியுமோ அப்படி வைத்திருக்கிறார்கள் .

போலீஸதுறையின் விசுவாசம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு தான் இருக்க வேண்டுமே ஒழிய அரசியல்வாதிகளுக்கு அல்ல என்னும் நிலை வரவேண்டும் . அரசாங்கத்தின் கையாளாக போலீஸ் இருக்கும் வரை ( அப்படி வைக்கப்பட்டிருக்கும் வரை ) police will behave with natural impunity and we can’t hold them accountable in any way .

கொரோனா லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில் இருந்தே நாம் போலீஸ் high handedness பார்த்துக்கொண்டு தான் வருகிறோம். குறிப்பாக சரியான காரணங்களோ , எச்சரிக்கையோ இல்லாமல் லத்தியை பயன்படுத்துதல் .எந்த சூழலில் , எந்த விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு என்னவித force பயன்படுத்தலாம் என்பது தெளிவாக வரையறை செய்யப்பட வேண்டும் . நீளமான லத்திகளை முழுதுமாகவே தடை செய்ய வேண்டும் (use short batons ).

Unjustified detention & Custodial Violence – குறித்த தண்டனைகள் மிகக் கடுமையாக்கப்பட வேண்டும். இது போன்ற தவறுகளில் நேரடியாக ஈடுபட்ட நபர்களை தவிர அவரின் மேலதிகாரிகளை வரை பொறுப்பாக்க வேண்டும் . எல்லாவித custodial violence வழக்குகளும் SSC ஆல் விசாரிக்கப்படும் நிலை வேண்டும் . முக்கியமாக SSC யின் பரிந்துரையை மறுக்கவியலா பரிந்துரையாக (binding ) ஆக மாற்ற வேண்டும் .

ஒரு ஜனநாயக சமூகமாக பல விஷயங்களில் நாம் முன்னகர்ந்திருக்கிறோம் ஆனால் போலீஸ் செயல்பாட்டில் மக்களை இன்னும் அடிமைகளாக நடத்தும் மனப்போக்கையே கொண்டிருக்கிறோம் .மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான உறவு பரஸ்பரம் மரியாதையும் , கடைமைகள் மற்றும் உரிமைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வும் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஸ்டேஷன் வாசற்படியை மிதிப்பது ஒரு குடிமகனுக்கு அவமானகரமான அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் செயலாக இருக்கக்கூடாது .போலீஸ் ஸ்டேஷன் என்பது நம் குழந்தைகளை எவ்வித தயக்கமும் இன்றி நாம் கூட்டிப்போக முடிகிற இடமாக இருக்க வேண்டும் .ஒரு குடிமகன் சட்டத்திற்கும் அது அளிக்கும் தண்டனைகளுக்கும் தான் பயப்பட வேண்டுமே தவிர போலீசுக்கு அல்ல. 

(29-June-2020)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: