
பதினைந்து வருடங்களுக்கு முன் நண்பர்கள் இணைந்து ஒரு நீண்ட ரோட் டிரிப் போயிருந்தோம். கிறிஸ்துமஸ் புத்தாண்டு இடைவெளியில். மொத்தம் 18 நாட்கள், 7000 சொச்சம் கி.மீ கள், ஆஸியின் நான்கில் ஒரு பங்கை கவர் செய்தோம் என்று சொல்லலாம்.
ஸ்மார்ட் போனோ ,யூடியூபோ இருந்திராத காலம், பாட்டு கேட்க வேண்டுமானல் CD தான் .இந்த பயணத்தின் போது ஓடவிட்டு தேய்த்த CD களில் ஒன்றுதான் அத்னான் சாமியின் ‘ Bheegi Bheegi’ ஆல்பம் .ஆஸி அவுட்பேக்கின் , திறந்து விரிந்த நிலக்காட்சிகளும் , கோடையின் வெப்பமும் அத்னானின் பாடல்களோடு பின்னிப்பினைந்தவையாகவே நினைவில் நிற்கின்றன.இருபது நாட்களுக்குள் வீடு திரும்பவேண்டும் என்பது மட்டுமே எளிய குறிக்கோள் மற்றபடி முற்றிலும் எந்த விதத்திலேயுமே திட்டமிடாத பயணம்.
பெரும்பாலும் இரவுத்தங்கல் ஏதாவது ஒரு காம்ப் சைட்டில் தான் இருக்கும். பின்னிரவு கேம்ப் ஃபயரில் காரிலிருக்கும் சிடி பிளேயரில் அத்னானை ஓடவிட்டு , கேம்ப ஃபயர் சுற்றி ஏதேதோ பேசியபடி அமர்ந்திருந்த தருணங்கள். ஏரிக்கரை ஒதுங்கும் சிற்றலைகள் தளும்பும் ஓசையும் , கண்களில் ஜுவலிக்கும் கனலும் , மெல்ல தீயில் சடசடக்கும் காய்ந்த பைன் மரக்குச்சிகளும் , தலைக்கு மேல் மினுங்கும் நடசத்திரங்களுமாக , எங்களுக்கு மட்டுமே அத்னான் பாடுவதாக எண்ணிக்கொண்ட தருணங்கள்.
இந்த இரவுக்காகவே பல்லாண்டு காலம் பயணம் செய்து இந்த புள்ளியில் , இந்த தருணத்திற்காகவே அணைத்துவந்து ஒருங்கே இணைந்திருப்பதான உணர்வு பின் கால ஓட்டத்தில் நண்பர்கள் பலர் வெவ்வேறு திசை நோக்கி பயணித்துவிட்டாலும் , இந்த பயணம் யாருக்குமே பின்னெப்போதும் மீளுருவாக்க முடியாத பயணமாகிவிட்டது.
(28 – July -2020 )
Leave a Reply