
வித்தியாசமான தெலுங்கு படம் ஒன்று , 2018 ல் எடுக்கப்பட்டது ,சமீபத்தில் தான் பார்த்தேன் . வித்தியாசம் என்றால் வழக்கமான கமர்சியல் தெலுங்கு படங்கள் போலும் இல்லாமலும் அதே சமயம் முற்றிலும் வித்தியாசமாக எடுக்கிறேன் பேர்வழி என்று மெனக்கெடாமலும் எடுக்கப்பட்ட படம் .
ஆந்தாலஜி வடிவிலான கதை . நான்கு இழைகளாக சொல்லப்பட்ட காதல் கதைகள் , இறுதியில அவை மிக அழகாக முடிச்சிடப்பட்டிருக்கும் .இவைகளை காதல் கதைகள் என்று சொல்வது கொஞ்சம் தட்டையான விளக்கம் தான் .இவைகள் பிரியம் , ஈர்ப்பு காதல் , அன்பு என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விகிதத்தில் கலந்திருக்கும் உறவுகளின் பரிமாணம்.
ஒரே வகுப்பில் படிக்கும் சுந்தரம்- சுனிதாவுக்கு இடையேயான முதிராத பருவத்தில் முகிழும் பிரியம் . அடியாளாக எடுபிடியாக வேலை செய்யும் ஜோசப்புக்கும் , நடனம் கற்கும் பிராமண பெண்ணான துடுக்கான பார்கவிக்கு மோதலில் ஆரம்பிக்கும் காதல் . வைன் ஷாப்பில் வேலை செய்யும் கட்டம் , தன் கடையின் ரெகுலர் கஸ்டமரான பாலியல் தொழிலாளி சலீமாவின் கண்களை மட்டுமே கண்டு அவள் மீது கொள்ளும் கள்ளமற்ற காதல்
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல ஜம்பது வயதைத்தொடும், இன்னும் திருமணமாகாத அட்டெண்டர் ராஜுவுக்கும் அலுவலகத்தின் புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் ஒரியாவை சேர்ந்த விதவை மேலதிகாரி ‘மேடமுக்கு’ இடையே உருவாகும் affection.
இந்த படத்தின் வலு அதன் narration ல் இருக்கிறது . மிக எளிதில் சிக்கலாகியிருக்கக்கூடிய கதையை பாத்திரங்களை மையப்படுத்தி சொல்லியிருப்பதால் அந்த சம்பவங்களுக்கு ஒரு நேர்மறையாக humanistic touch கிடைக்கிறது . உதாரணமாக பக்கத்திலிருக்கும் கோவிலுக்கு பாதயாத்தியையாக போக வேண்டுமென்று ‘மேடம்’ கேட்க பாதி வழியில் அவர் நடக்க முடியாமல் சோர்ந்து விட ( டயாபடிக்ஸ் பேஷண்ட ) தன்பையில் வைத்து கொண்டு வந்திருக்கு சர்க்கரை தண்ணீரை அவருக்கு அளிக்கும் காட்சி , பின்னர் அவரை இயல்பாக கைத்தாங்கலாக கோவிலுக்கு அழைத்துப் போகும் இடம் .
அதே போல ‘மேடம்’ தனது இருபது வயது மகளுடம் தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசும் இடம் . இவை எல்லாம் மிக எளிதாக மெலோ டிராமாவாக ஆகியிருக்க வேண்டிய இடங்கள் . அதே போல படத்தில் வரும் எல்லா இன்னல்களுமே மனிதர்களால் நேரடியாக நிகழ்வதில்லை அது சமூகத்தை ஆழ இறுக்கி பிடித்திருக்கும் மதம் , சாதி , அந்தஸ்து , சமூக கட்டுகள் போன்றவைகளின் கொடுநகங்கள் கீறியதால் நிகழும் காயங்கள்.
இந்த அழுத்தங்கள் இல்லாமல் போனால் மனிதர்கள் இயல்பாகவே அன்பும் புரிவும் கொண்டவர்களாக இருக்கமுடியும் என்பது மொத்த திரைப்படத்தின் உள்ளோட்டமாக தொடர்ந்து வருகிறது . இவ்வகை toned down narration மிகவும் சக்திவாய்ந்தது . இல்லையன்றால் விலைமாதாக இருக்கும் தனது காதலிக்கு காதல் பரிசாக ஒரு மதுக்குப்பியை அளிப்பதும் அவளுடம் சேர்ந்து மது அருந்துவதும் என்பதாக வரும் காட்சிகளை சற்றும் உறுத்தலே இல்லாமல் காட்ட இயலாது .
மயிலிறகால் தொட்டுக்காட்டுவது போல இதில் இன்னொரு விஷயமும் உண்டு. ராஜு என்னும் மனிதனின் சுயம் , தேவைகள் உறவுகள் , சமூகம் , மதம் குறித்த பார்வைகள் எப்படி இயல்பாக அவன் வாழ்நாளில் பரிணாமம் கொள்கிறது என்னும் சித்திரம் . இது நேரடியாக சொல்லப்படுவதல்ல என்பதனால் இன்னுமே ஜீவனுள்ளதாய் வெளிப்படுகிறது . ஜம்பது வயதை நெருங்கு ராஜுவின் மனநிலை அவன் கடந்து வந்த பாதையின் வடுக்களே தெரியாமல் திறந்து வைத்த சாளரம் போலிருக்கிறது .
ராஜுவாகவும் மேடமாகவும் நடித்தவர்கள் தேர்வு கச்சிதம் , இந்தியாவில் அப்படி இருவரை எங்கும் நம்மால் பிடிக்கமுடியும். ஒரு சராசரி நடுவயது outlier கள் ஆன ஆண் பெண் உறவை இவ்வளவு இயல்பாகவும் நம்பகமாகவும் இந்திய சினிமாக்களில் பார்த்ததில்லை . டைரக்டருக்கு வெங்கடேஷ் மஹாவுக்கு வாழ்த்துக்கள்.படத்தை தயாரித்த விஜய பிரவீனாவே சலீமாவாகவும் நடித்திருக்கிறார் , அழகிய விழிகள்.
இவ்வகை படங்கள் மலையாளத்தில் வருவதில் ஆச்சரியம் இல்லை தெலுங்கில் வருவது தான் ஆச்சரியம் நல்ல ஆரம்பம் . தமிழிலும் இது போன்று மனிதர்களை, உறவுகளை மையப்படுத்தி படங்கள் வரவேண்டிய அவசியம் இருக்கிறது , இந்தப் படமும் தமிழில் ரீமெக் செய்தால் நன்றாக வரும் .
Leave a Reply