இந்தி கவிதைகள்

அசோக் வாஜ்பாயி

எழுத்தாளர் எம்.கோபால கிருஷ்ணன் பல இந்தி கவிதைகளை மொழிபெயர்த்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.கீத் சதுர்வேதி , மங்களேஷ் டபரால் , அசோக் வாஜ்பாயி , கிரிராஜ் கிராது , கேதார்நாத் சிங் என்று பல முக்கிய கவிஞர்கள் கவிதைகளும் இதில் அடக்கம்.

இந்த கவிதைகளை தொடர்ந்து படிக்கையில் இந்தி கவிதைகளின் அழகியல் குறித்தும் கவிதை போக்கு குறித்தும் நல்ல ஒரு அறிமுகம் கிடைக்கிறது.எனக்கு பிடித்த இரண்டு கவிதைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன் . மேலும் கவிதைகளை Gopalakrishnan Murugesan அவர்களின் முகநூல் பக்கத்தில் வாசிக்கலாம்.

***

யாரும் காதுகொடுத்துக் கேட்பதில்லை

அழைப்பை யாரும் கேட்கவில்லை

படிகளின் மீது எச்சரிக்கையுடன்

காதுயர்த்தி நிற்கும் பூனை கேட்கிறது

பயந்து ஓடிவிடவேண்டுமா அல்லது

அசையாது நின்று அத்திசையில் பார்க்கவேண்டுமா

என்று அதற்குத் தெரியவில்லை.

அலறலை யாரும் கேட்கவில்லை

ஜன்னலுக்கு வெளியே

பச்சைபசேலென நிற்கும் மரத்தில்

திடீரென வந்தமர்ந்த நீலப் பறவை கேட்கிறது

இது அலறலா அல்லது

ஓசைகளின் இரைச்சல்களில் இன்னுமொரு ஓசையா

என்று அதற்குத் தெரியவில்லை

பிரார்த்தனையை யாரும் கேட்கவில்லை

மடியில் கிடக்கும் பால்மணம் மாறாத மழலை கேட்கிறது

ஆதி இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த

திகைப்பிலிருக்கும் அதற்கு

ஓசைக்கும் ஓசையின்மைக்கும் இடையிலான அமைதிதான்

பிரார்த்தனையா என்று தெரியவில்லை.

மூலம் :அசோக் வாஜ்பாயி

தமிழில் : எம்.கோபாலகிருஷ்ணன்

***

கேதார்நாத் சிங்

என்னுடைய கைகளில்

அவளது கைகளைப்

பற்றிக்கொண்டு யோசித்தேன்.

வெம்மையும்

அழகும் கொண்ட கைகளைப்போல்,

இருக்கவேண்டும்

நாம் இந்த உலகுக்கு

மூலம் :கேதார்நாத் சிங்

தமிழில் : எம்.கோபாலகிருஷ்ணன்

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑