
கசல் வடிவம் கவிதைக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவம் , பிற வடிவங்களை விட பாடல் வரிகள் மேல் அதிகம் கவனம் குவியும் வடிவம்.மேலும் இசைக்கருவிகள் பெரிதும் சார்ந்திராமல் பாடகர் தன் கற்பனைக்கு ஏற்ப வரிகளை விரித்தும் , நீட்டித்தும் , இட்டு நிரப்ப அனுமதியளிப்பது .
சமயத்தில் கவிதையாக கூட சில வரிகளை பாடகர் வாசிப்பதும் உண்டு ,பாடலின் மொத்த creative & performance control உம் பாடகர் கையில் இருக்கும் .ஜக்ஜித் சிங் பாடியதில் இதை விட பரவலாக அறியப்பட்ட பல பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடலின் (எழுதியவர் ரானா சஹரி ) எளிமை இந்த கசலுக்கு கூடுதலான ஒரு அழகை அளிக்கிறது.
பொதுவாக பதிவு செய்யப்பட்ட இசையில் , ஒலிப்பதிவு கூடத்தில் நிகழ்த்தப்படுவதால் , துல்லியமும் , இசையின் தரமும் மிகச்சிறப்பாக இருக்கும் .மேடையில் பாடும் போது இந்த நேர்த்தி முற்றாக அமையாது ஆனால் அதில் அந்த சூழலுக்கும் , பாடகரின் மன விகாசத்துக்கும் இயைந்து கொடுக்கும் ஒரு புதுமை அல்லது சின்ன improvisation இருக்கும் .
கசல் கச்சேரிகளில் இவ்வகை improvisation இன்னும் கூட விரிவாக நிகழும் , ஒவ்வொரு கச்சேரியிலும் அதே பாடல் கொஞ்சம் வேறு மாதிரி – மாறுபட்ட வேகத்தில் அல்லது மாறுபட்ட intonation உடன் பாடப்படும் . எல்லா சமயமும் இது சிறப்பாக கூடி வருமென்று சொல்லமுடியாது ஆனால் தகுந்த சூழலும் , நல்ல ரசிகர்களும் அமைந்துவிட்டால் மேடையில் அந்த பாடல் முற்றிலும் வேறொரு பரிமாணம் கொண்டுவிடும்.
அனைத்துமாக ஒரு உறவு இருப்பதற்கும் ,பின் ஒரு நொடியில் சம்பந்தமே இல்லாமல் வேறொன்றாய் மாறும் தருணத்துக்கு இடையே நிகழும் ஊசலாட்டத்தை சொல்வது தான் இந்த கசல் . மனதுக்கு நெருக்கமான ஒருவர் விலகும்போது , அவர் என்ன ஆகிறார் , how does a dear one becomes an estranged one ?இந்த தருணத்தில் அந்த உறவு மட்டுமே அறுபடுவதில்லை , ஒட்டுமொத்த உறவுகள் குறித்த நம் உறுதியும் ஆட்டம் காண்கிறது அந்த இக்கட்டில் நாம் அணைவரும் உணரும் uncertainity ஐ படம் பிடித்து காட்டும் பாடல் இது .
கவிஞனுக்கு தன் காதல் அன்னியமானதில் அந்த நகரமே அன்னியமாக தெரிகிறது , யாருமே உறவில்லாமல் , யார் முகத்தையுமே அவன் பார்க்க முடியாததுபோல . இறுதி வரியில் காதலாக இருந்த நீ தான் காதலின் எதிரியும் கூடவா என்ற ஒரு baffling state ல் முடித்திருப்பார்.
‘woh jo ishq tha woh junoon tha,
ye jo hijr hai ye naseeb hai’
the love we had was our passion,
this separation is our destiny
பாடலின் இரண்டாம் வரியில் வரும் ஜுனூன் என்னும் வார்த்தையை முக்கியமானது – இதை ‘தீவிரமான ஈடுபாடு’ என்பதாக பொருள் கொள்ளலாம் . பாடலில் இந்த வார்த்தையை மட்டும் உட்சாடனம் போல மீண்டும் மீண்டும் பாடுவார் .
திருவிழாவில் ராட்டினத்தில் போகும் போது ஆடும் விளையாட்டு போல இது. கீழே வரும் போது நாம் தரையில் விட்டு போகும் கைக்குட்டை அடுத்து சுற்று கீழே வரும்போது ஒரு ரப்பர் பந்தாகவோ அல்லது வளையலாகவோ இருக்கும் .பாடலிலும் அப்படித்தான் ஒரு வரியோ ஒரு வார்த்தையோ திரும்ப திரும்ப சொல்லப்படும் போது , அந்த வார்த்தைகள் அதன் அர்த்த இறுக்கம் தொலைந்து வானில் அலையும் மேகங்களை போல பார்ப்போர் உணரும் வடிவம் கொள்ள ஆரம்பிக்கின்றன.
அதே போல இன்னுமொரு வரி வரும்
mein kise kahoon mere saath chal
yahan sab ke sar par saleeb hai
whom shall I request to accompany me ,
Here everyone seem to carry their own cross
இதில் ‘சலீப்’ (சிலுவை ) என்னும் வார்த்தை வரும் போதும் ரசிகர்களிடம் ஒரு உற்சாக ஆரவாரம் எழும். எல்லோரும் சுமக்கும் சுமை என்னும் அந்த வரி எல்லோரும் பொருந்திக்கொள்வதாக இருக்கும் . இங்கு அந்த வார்த்தை மேலும் மேலும் அடர்த்தி கொண்டு ஒரு கூழாங்கல்லை போல தண்ணீரில் அமிழ்ந்து ஆழத்தில் சென்று படிந்துவிடுகின்றது .இந்த சின்ன சின்ன வேறுபாடுகள் ஸ்டூடியோ வடிவத்தில் இடம் பெற்றிருக்காது.
இவ்வகை ரசிக ஊடாட்டமும் , பாடகருக்கான சுதந்திரம் வெளியும் கசலின் தனித்தன்மை , அதனால் தான் பல கசல் பாடல்கள் முதன் முறை கேட்டதைவிட மீண்டும் மீண்டும் கேட்கும்போது மேலும் இனிமை கொள்கின்றன.
#RanaSahri#JagjitSingh#ghazal#KoiDost#Junoon#Saleeb
Leave a Reply