
ஒரு காட்சியை ஓவியமாக உள்ளது உள்ளபடி வரைவதில் துல்லியம் என்பது முற்றாக கை கூடாது . ஏதோ ஒரு விதத்தில் சில அம்சங்கள் மிகையாகவோ போதாமைகளுடனோ அமைந்துவிடும் . தூரிகையில் தொட்டு எடுக்கும் வண்ணம் என்பது கண் முன் தோன்றும் வண்ணங்களின் நுண்மையை பிரதி எடுக்க முயலும் பாவனை மட்டுமே. படைப்பு என்பதே ஒரு விதத்தில் exaggeration தானே.
ஆனாலும் ‘உள்ளது உள்ளபடியே’ எழுதவும் முடியாது .உள்ளது என்பது பெரும்பாலும் சாதாரணமானது , அன்றாடத்தன்மை கொண்டது விதந்தோதும் விசேஷ குணங்கள் ஏதுமற்றது . அந்த சாதாரணங்களை சாதாரணங்களாக நேருக்கு நேர் அப்படியே பார்க்க முடியாததன் சலிப்பே அவைகளை கதைகளாலும் கற்பனைகளாலும் இட்டு நிரப்பி வண்ணமயமாக்கிக்கொள்ள நம்மை செலுத்துகிறது.
இப்படியாக இருக்கையில் உண்மையிலேயே அசாதரணமான ஒரு நபரைப் பற்றி புனைவில் வடிக்க முயலும் போது அந்த புனைவுருவாக்கங்களை , மிகைகளை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது , ஆனால் அதுவே மிகவும் கடினமான செயலாகவும் ஆகிவிடுகிறது. ஆணும் பெண்ணும் படத்தில் ராச்சியம்மாவாக வரும் பாத்திரப்படைப்பின் பலம் இது தான் . இங்கு அந்த படத்தை விட ராச்சியம்மாவின் பாத்திரமே என்னை மிகவும் ஈர்த்தது .
நண்பர்கள் சிலர் இந்த பாத்திரத்தில் அப்படி என்ன குறிப்பிட்ட விசேஷம் என்று கேட்டிருந்தார்கள் . ராச்சியம்மாவின் பாத்திரத்தை , வழக்கமாக நாம் சினிமாக்களின் பார்க்கும் துடுக்குத்தனமான வாயாடி என்ற trope உடன் ஒப்புமை வைக்கலாகாது . ராச்சியம்மாவின் பாத்திரம் பன்முகத்தன்மை கொண்டது . ஆனால் அது புனைவான ஒரு பாத்திரமாக வெளிப்படாமல் அது அந்த பாத்திரத்தின் ஆதாரமான உள்ளார்ந்த குணத்தில் வெளிப்பாடு என்பது நம்பகத்தன்மையுடன் திரையிலும் நடிப்பிலும் வந்திருக்கிறது .
ராச்சியம்மாவின் பாத்திரம் குமரியும், கன்னியும், அன்னையுமான ஒரு பாத்திரப்படைப்பு . மிக அரிதாகவே இத்தகைய கனமாக பாத்திர வார்ப்புகளை நாம் திரையில் பார்க்க முடியும் .இது மட்டுமல்லாமல் தன்னை ஒரு எளிய மனுஷியாகவும் வெளிப்படுத்தும் பாத்திரம் . இவ்வாறு பல்வேறு குண பேதங்கள் இருந்தாலும் அவற்றுக்கு இடையே துருத்தி நிற்கும் முரண்களோ பொருந்தாமைகளோ இருப்பதில்லை. கோபுரத்தில் வந்து அடையும் புறாக்களை போல அவை ராச்சியம்மாவில் மிக இயல்பாக அடைந்து ஒடுங்கிவிடுகின்றன .
தம் அம்மா இறக்கும்போது கொடுத்த வாக்கின்படி ‘பிழை ஏதும் நடந்துவிடக்கூடாது’ என்று வைராக்கியமாக அம்மன் சன்னிதியில் மஞ்சள் இட்டு சத்தியம் செய்து கொள்ளும் குமரி. ஏகாந்தமான மலையுச்சியில் குட்டிகிருஷ்ணன் அருகே வெட்கத்துடன் அமர்ந்து கொள்ளும் கன்னி , அம்மை போட்டிருக்கும் கிருஷ்ணணுக்கு வேப்பிலை அடித்து அம்மை இறக்கும் அன்னை . கொஞ்சமும் தயக்கமில்லாமல் நடுரோட்டில் , கொடுத்த கடனை சட்டையயை பிடித்து உலுக்கி கேட்கும் streetsmart மனுஷி .
இத்தனை இருந்தும் எதிலுமே நாடகத்தன்மை வந்துவிடாத நடிப்பு. இந்த பல்வேறு குணங்களுக்கு இடையே உருவாகிவரும் ஒருமை தான் இந்த பாத்திரத்தை ரத்தமும் சதையுமாக ஆக்குகிறது . ராச்சியம்மாவிடம் தைரியம் அடாவடித்தனமாக மாறுவதில்லை . ‘அது என் இஷ்டம்’ என்று கம்பீரமாக உரைக்கும் ராச்சியம்மாவின் தெளிவு அகம்பாவமாக மாறுவதில்லை . காதலனின் இழப்பு காதலின் இழப்பாக மாறுவதில்லை . இழப்புகள் எதுவுமே தோல்விகளாக மாறுவதில்லை .
பணம் முக்கியம் என்பதாக தன் அன்றாடத்தில் வாழ்ந்து கொண்டு பின் தனக்கு அது முக்கியமே இல்லை என்று போகிற போக்கில் சொல்லிப்போகிறாள் . ராச்சியம்மா பாத்திரத்தில் சாதாரணத்தை அசாதாரணமாக்காமல் , அசாதாரணத்தை சாதாரணமாக்கியிருக்கிறார்கள்.
இந்த வசேஷ குணங்களின் திரட்சியை பார்வதி மிக நுட்பமாகவும் அழகாகவும் தன் உடல் மொழியில் கொண்டு வந்திருக்கிறார். அமரும் போதும் நடக்கும் போதும் எல்லாம் அந்த தீவிரமும் வசீகரம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் .அமரும் போதெல்லாம் அவர் கைகள் எப்போதுமே முழங்கால்களின் மேல் ஒரு அரசிக்கு உரிய கம்பீரத்துடனேயே அமைந்திருக்கும் .
இந்த கதையை எழுதிய எழுத்தாளர் உரூப் , இயக்குமர் வேணு , இந்த பாத்திரமேற்று நடித்த பார்வதி என்று ராச்சியம்மாவின் ஜீவன் ஒவ்வொருவரின் மனதிலும் விஷ்வரூபம் கொண்டிருந்திருக்கிறது , அதுவே பார்வையாளனாக நமது மனதிலும் விரிகிறது .
களிமண் கொண்டு உருவாக்கப்படும் பிள்ளையார் சிலைகளுக்கே வண்ணமடித்து பொலியவைக்க வேண்டியிருக்கிறது .நுண்மைகளை தன்மீதே ஏற்றுக்கொண்ட கற்சிலைக்கு அந்த அவசியம் இருப்பதில்லை. ஒரு சிறு விளக்கின் ஒளி போதும் அது காலகாலமாய் உயிரோட்டத்துடன் ஒளிர்ந்தபடி இருக்கும் .
Leave a Reply