
“நான் வீட்டுக்குள் இருக்கும்போது சுவாதீனமாக நானாக இருக்கிறேன். பயணிக்கும்போது வேறு ஆளாக மாறிவிடுகிறேன். என் வீட்டைவிட்டுத் தள்ளிப் போகப்போக எனக்கே நான் அந்நியமாகி விடுகிறேன். அப்படியான தொலைவு உள்ளே கிடைக்கிறது. நானும், ஜெயமோகனும், வசந்த குமாரும் ஹரித்துவாரில் கும்பமேளா பார்ப்பதற்காகப் போயிருந்தோம்.
ராத்திரி இரண்டு மணிவரை குடுகுடுப்பைக்காரன்போல, தலையில் உருமால் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன். என் தெருவில் அதைச் செய்ய மாட்டேன். கங்கைக் கரையில் இருந்த நடைபாதையில் படுத்துத் தூங்கினோம். இப்படி நான் ஒரு அநாமதேயமாக ஆவது எனது எல்லைகளைத் தாண்டும்போது கிடைக் கிறது. அண்டசராசரங்களை யோசிக்கும்போது நாமெல்லாம் நுண்கிருமிகளைவிடச் சிறியவர்கள். ‘நான்தான் முதலில் இதைச் செய்தேன், நான்தான் இரண்டாவதாக இதைச் செய்தேன்’ என எவ்வளவு சொந்தம் கொண்டாடுகிறோம். பயணத்தில் அதெல் லாம் காணாமல் போய்விடுகிறது.
ரிஷிகேஷுக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்றிருந்தேன். அவர் கள் வேறெங்கோ ஷாப்பிங் போயிருந்தார்கள். நான் லக்ஷ்மண்ஜூலாவிலிருந்து கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது லேசாகத் தூறல் போட்டது. அந்தத் தூறலில் கங்கையின் மொத்தப் பரப்பும் சிலிர்த்துக்கொண்டதுபோல ஒரு காட்சி கிடைத்தது. அதில் கரைந்துவிடத் தோன்றியது. மறுபடியும் குடும்பத்துக்குள் போக வேண்டாம், இப்படியே எங்கேயாவது போய்விடலாம் என்றிருந்தது. ஆனால், ஒரு நொடிதான். பிறகு, பிரக்ஞை நம்மைத் திருப்பி இழுத்துக்கொண்டுவந்துவிடும். பிரக்ஞை யின் இந்தக் கட்டளைக்குக் காது கொடுக்காதவன்தான் வேறு ஒன்றாக மாறிவிடுகிறான். இசை என்பது ஒருவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணம்!
-யுவன் சந்திரசேகர்
(நன்றி: hindutamil )
(13-July-2020)
Leave a Reply