கர்ணன் – காலைச் சுடரொளி

நேற்று கர்ணன் படம் பார்த்தேன். மேலோட்டமாக இந்த படம் குறித்த பல விமர்சனங்களை முன்னரே வாசித்திருந்தேன் . ஆனால் படத்தை பார்த்தபிறகு படமும் விமர்சனங்களுக்கும் முற்றிலும் வெவ்வேறு தளங்களில் செயல்படுவதாக தோன்றியது . இந்தப் படம் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்ட ,கதை நிகழும் வருடம் குறித்த விமர்சனத்துக்கு படத்துக்கு வெளியே ஒரு அரசியல் முக்கியத்துவம் இருந்திருக்கலாம். ஆனால் படத்தின் மீதோ , படம் சொல்ல வந்த விஷயத்தின் மீதோ அது பெரிய தாக்கத்தை செலுத்தியதாகத் தெரியவில்லை.

மாரி செல்வராஜ் கதை சொல்லலில் உள்ள தனித்துவம் அவர் புற நிகழ்வுகளையும் அக நிகழ்வுகளையும் மிகச்சரளமாக அடுத்து அடுத்து காட்டிப் போவதில் இருக்கிறது என்று நினைக்கிறேன் , சில சமயங்களில் அவை ஒன்றினுள் ஒன்றாக பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் . அவை குறியீடுகள் என பல இடங்களில் அப்பட்டமாக வெளிப்பட்டாலும் அவை ஏதோ பாவனையாகத் வெளிப்படுவதில்லை.

அவற்றில் பூடகமாக ஏதும் இருப்பதில்லை. ஒரு சிறுகதைக்கு அதன் தலைப்பு எவ்வாறானதோ அவ்வாறே இந்த குறியீடுகள் வெளிப்படுகின்றன . சமூகப் பிரச்சனைகளை பேசும் பல படங்களில் ஒன்ற முடியாமல் ஏமாற்ற அளிக்க முக்கிய காரணம் அவை புற அடையாளங்களை , புறச் சிக்கல்களை மட்டுமே பெரிதும் மையமாக்கி கதை சொல்ல முயல்வதுதான் . அப்படி நிகழும் போது அது ஒரு கோஷமாகவோ , மேலோட்டமான அரசியல் நிலைப்பாடாகவோ சுருங்கிவிடுகிறது , அவ்வித கதை சொல்லலில் ஒரு loudness வந்துவிடுகிறது.

மாறாக இவ்விதம் ஒரு பெரும் சமூகச்சிக்கலின் மிக அந்தரங்கமான தனிப்பட்ட பாதிப்பை , அது மக்களின் தனிப்பட்ட மனநிலைகளில் உண்டாக்கும் மாற்றங்களை , சலனங்களை காட்சிப்படுத்துபோது பார்வையாளர்களுக்கு அது தனிப்பட்ட ஒரு உணர்வு அனுபவமாகவும் ஆகிறது . இதை பரியேறும் பெருமாள் படத்திலேயே நன்கு கையாண்டிருந்தார் , இந்தப் படத்தில் இன்னுமே கூட அதில் தேர்ச்சி வெளிப்படுகிறது .

படத்தின் மையமான மோதல் ஒடுக்குமுறையில் இருந்து மீள்வது மெல்ல மெல்ல நிகழ வேண்டுமா இல்லை அந்த மீன் ஒரே வீச்சில் வெட்டப்படுவது போல ‘வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு’ என்று நிகழ வேண்டுமா என்பதே . அப்படி வெட்டப்படாமல் போனால் வருடா வருடம் அந்த மீன் பெரிதாகிக்கொண்டே தான் வரும் ஒரு கட்டத்துக்கு மேல் வெட்டவே முடியாமல் போய்விடும். ஆனால் அப்படி முயன்று முடியாமல் போனால் அது பல அடிகள் பின்னுக்கு போவது போன்றது , தலை போகாவிட்டாலும் தலை முடியை இழக்கும் சிறுமையை உள்ளடக்கியது.

ஆரம்பத்தில் மொத்த ஊருமே கர்ணனின் நேரடியான எதிர்ப்பையும் ஆவேசத்தையும் ஆதரிக்காவிட்டாலும் , ஏதோ வகையில் அந்த எதிர்ப்பின் தார்மீகத்தின் பக்கம் மெல்ல மெல்ல இழுக்கப்படுகிறார்கள் . கர்ணனில் பீரிட்டு எழும் தார்மீக எதிர்ப்பை எதிர்கொள்ள அவர்களிடம் மேலோட்டமான சமாதானங்களை தாண்டிய வலுவான வாதங்களே இருப்பதில்லை. இரவில் தன்னுள் சுருண்டு ஒடுங்கிக் குவிந்திருக்கும் காடு எப்படி அதிகாலைச் சுடரொளியை மறுக்கவே முடியாதோ அது போல .

கர்ணன் ஊரில் உள்ள அனைவருக்கும் அளிக்கும் அந்த அகத்தூண்டல் தான் படத்தில் ஆதார பலம் என்று நினைக்கிறேன் . சில இடங்களில் இது நேரடி வசனமாக சொல்லப்பட்டாலும் இதன் பெரும்பகுதி செயல்களால் உணர்த்தப்படுகிறது . ஒடுக்குமுறையின் அத்தனை வலிகளையும் ,அது உருவாக்கியிருக்கும் நடைமுறை ஒழுங்கை மீறுவதில் உள்ள இழப்புகளையும் அந்த கிராம மக்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தாலும் , அதையும் தாண்டி ஒரு கூட்டு எதிர்ப்புக்கு அனைவரும் galvanise செய்வது தான் கர்ணனின் வெற்றி .

வீரம் போராட்டம் எல்லாம் முக்கியம் தான், அது அளிக்கும் அகத்தூண்டலும் கூட. ஆனால் இறுதியாக சுவற்றில் வரையப்படும் அந்த படத்தின் தலையாக அமைவது ஏமன் தான் , அங்கு அவரை பொறுத்துவது அவரின் தியாகம் . வீரம் வெல்கிறது ஆனால் பிறருக்காக தன்னை அளிப்பது தான் அமரத்துவம் பெறுகிறது .

பாத்திர படைப்புகளும் உயிரோட்டமாக அமைந்திருக்கின்றன . திரெளபதியாக நடித்திருக்கும் ரிஜிஷா பருத்திவீரன் பிரியாமணி பாத்திரத்தை நினைவூட்டுகிறார் , அவர்களின் உறவு மிகைகள் இல்லாமல் அதே சமயம் தீவிரம் குன்றாமல் சொல்லப்பட்டிருக்கிறது . கர்ணனின் அக்கா பாத்திரம் கர்ணன் மேல் கோபம் கொள்ளும் தருணம் very authentic . லால் பாத்திரம் ஒரு catalyst ,ஏமன் பல்வேறு கதாப்பாத்திரங்களை , சரடுகளையும் இணைக்கும் புள்ளி .

படத்தில் உச்சகட்டமாக நான் உணர்ந்த தருணம் கிராமத்தில் போலீசார் புகுந்து தாக்கும்போது படுத்த படுக்கையாக இருக்கும் பாட்டி அப்படியே படுக்கையில் மூத்திரம் பெய்வதுதான் .பல திசைகளில் விரியும் அடர்த்தி மிகுந்த காட்சி . மாரி செல்வராஜ் அவர்களின் கதை சொல்லலில் ஒரு integrity இருக்கிறது , படம் முழுதும் அழுத்தமாக அவரின் படைப்பாளுமை தென்படுகிறது ,அதில் குழப்பங்களோ குளறுபடிகளோ இருப்பதில்லை . இது மாரி செல்வராஜ் படம் என்று தெளிவாக தெரிகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: