வாழ்க்கையென்னும் விசித்திரம்

நீதிமன்ற கிளார்க்காக பணி புரியும் இருபத்து மூன்று வயது ஆஷ்லி அவர் பணி புரியும் கோர்ட்டில் மேஜிஸ்டிரேட்டாக இருக்கும் ரோட்னி ஹிக்கின்ஸ் என்பவர் மீது காதல் வயப்படுகிறார் .ரோட்னிக்கு வயது 68 , ஆஷ்லியை விட இரண்டு மடங்கு வயதில் மூத்தவர் . சரி வயது ஒரு பக்கம் இருக்கட்டும் , பரஸ்பரம் காதல் ,எனவே இதை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார்கள் .நிச்சயதார்த்தம் மோதிரம் எல்லாம் அளித்து , அந்த செய்தி பத்திரிக்கைகளைல் பரவலாக பேசப்பட்டது.

இதெல்லாம் நடந்தது 2019 ல் . அந்த செய்தி வந்த ஓரிரு வாரங்களில் ஆஷ்லி எதிர்பாராத விதமாக ஒரு வாகன விபத்தில் உயிரிழக்கிறார் . ரோட்னி வயதில் மூத்தவர் என்பதால் அவருக்கு தான் ஏடாகூடமாக ஏதாவது நிகழும் என்று எண்ணியிருந்த அனைவருக்கும் இது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி . ஆனால் இத்தோடு போயிருந்தால் கூட சரி விதி என்று கடந்து போயிருக்கலாம் . அதன் பின் நடந்த நிகழ்வுகள் இன்னுமே கற்பனைக்கு எட்டாதவை.

ஆஷ்லியில் எதிர்பாராத மரணத்தினால் அவருக்கு சேர வேண்டிய சூப்பர் ஆனுவேஷன் ( நம்ம ஊர் PF போன்றது ) மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகை , ஆஷ்லியில் அம்மாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முடிவாகிறது . ஏனென்றால் அவரின் பெயர் தான் பாலிசியில் பயனாளியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது .

ஆனால் ரோட்னி இதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறார் . ஆஷ்லியுடன் தனக்கு உறவு நிச்சயமானதனால் , சில மாதங்களாக இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்திருப்பதால் , தனக்குத்தான் அந்த காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறார் ( மாஜிஸ்டிரேட்டாக இருந்து கொண்டே ! ) .இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வந்திருக்கிறது ரோட்னிக்கு சாதகமாக.

திருமணம் ஆகாவிட்டால் கூட , சேர்ந்து வாழ்வதால் (de-facto ) அந்த இணை உறவே அம்மா -பெண் உறவை விட நெருக்கமானது , சட்டப்பூர்வமானது என்று கோர்ட் முடிவுக்கு வருகிறது . இத்தனைக்கும் ஆஷ்லி தனது அம்மாவை பாலிசியில் பயனாளி என்று மிகத்தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார் . நடைமுறையிலும் அம்மாவின் வீட்டுச் செலவுகளை எல்லாம் ஆஷ்லியே தான் செய்து வந்திருக்கிறார்.

ஆனால் இதில் ஒரு சின்ன சட்டச் சிக்கல் இருந்தது . இவ்வாறு பயனாளியாக நாம் ஒருவரை தேர்ந்தெடுக்கும் போதும் அதை வெறுமனே பாலிசியில் செய்யாமல் சட்டப்பூர்வமாக binding ஆக செய்திருக்க வேண்டுமாம் இல்லையென்றால் சட்டப்படி உரிமை கொண்ட யாரும் அதை நீதிமன்றத்தில் எதிர்க்கலாம் . இந்த ஓட்டையை பயன்படுத்திக்கொண்டு ரோட்னி தனக்கே காப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என்று வாதித்து வென்றும் விட்டார்.

ஆஷ்லியில் அம்மா வறுமையில் இருப்பவர் , சிறிய வேலைகளை செய்து வாழ்க்கை நடத்தி வருபவர் , தனது மகளின் காப்பீட்டுத் தொகை அவருடையை எஞ்சிய வாழ்நாளுக்கான பொருளாதார உறுதியாக இருந்திருக்கும் . ஆனால் மேஜிஸ்டிரேட் ரோட்னிக்கு அது வெறும் 6 மாதம் சம்பளம் மட்டுமே.

இத்தோடு நிற்கவில்லை ஆஷ்லியுடன் வாழவேண்டும் என்று தான் முன்னர் விட்டு விலகி வந்த முதல் மனைவியோடு ரோட்னி மீண்டும் இணைந்து விட்டார் , அவர்கள் இருவரும் எதுவும் நடக்காதது போல வாழ்க்கையை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்கள் , முன்னை விட இன்னும் கொஞ்சம் செழிப்பான பணக்காரர்களாக .

ஆஷ்லி கொஞ்சமாவது இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்பாரா . இதையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வது …. விசித்திரம் .

#AshleighPetrie

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: