
சீன அத்துமீறல் குறித்த முந்தைய பதிவுகளுக்கு பின் , சில நண்பர்கள் நான் மிகவும் pessimistic ஆன நோக்கில் இதை எழுதியிருப்பதாகவும் இந்தியா அப்படி கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்காது என்பதாகவும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டிருந்தார்கள் . சரி அவர்களின் நம்பிக்கையை குலைப்பானேன் என்று , பொதுவாக ஆம் அது ஒரு சாத்தியக்கூறு தான் என்று சொல்லிவைத்தேன்.
நமக்கு விருப்பமான ஒரு தீர்வு என்பதை எல்லா விஷயத்திலும் நாம் கோரலாம் தான் ஆனால் நாம் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது என்பதையும் நாம் உணரவேண்டும் . குறிப்பாக சர்வதேச அரசியல் என்பதில் Realpolitik தான் கோலோச்சும் . மிக கறாராக அவரவர் வலிமையை கொண்டே எடைபோடப்படுவோம் .
மிகச்சுருக்கமாக கடந்த 48 மணி நேரத்தில் என்ன நடத்திருக்கிறது என்று பார்க்கலாம் .
1.ஆஸ்திரேலிய பிரதமர் – ஆஸியின் முக்கிய கணிப்பொறி கட்டுமானங்களின் மீது , வெள்ளியன்று சைபர் அட்டாக் நிகழ்ந்ததாகவும் அதை ஒரு வேறொரு நாட்டின் சார்பில் தான் யாராவது நடத்தியிருக்க முடியும் என்று அறிக்கை விடுகிறார். அந்த “நாடு” எது என்பதை அவர் சொல்லவில்லை , ஆனால் ஆஸி அமைப்புகள் அளித்த அறிக்கையின் சீனா என்று குறிப்பிட்டிருக்கின்றனர் .கடந்த சில வருடங்களில் ஆஸி பார்லிமெண்ட் , பல்கலைகழகங்கள் மீதும் இதே போல சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
2.ஆஸி தாக்குதல் நிகழ்ந்த அதே சமயம் பங்களாதேஷ் அரசு , சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 97% பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா முற்றாக விலக்கிக்கொண்டுவிட்டதாக அறிக்கை விட்டிருக்கிறது . பங்களாதேஷின் சர்வதேச வர்த்தகத்துக்கு இது மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்பதை தனியே விவரிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
3.இதே நாள் இந்திய பிரதமர் , “நம் நாட்டு எல்லைக்குள் யாருமே நுழையவில்லை” என்று அறிக்கை விடுகிறார். (சீனா என்ற பெயர் கூட இந்த டிவீடில் குறிப்பிடப்படவில்லை ) இது இந்திய வெளியுவுத்துறை அமைச்சகத்தில் அறிக்கைக்கே முற்றிலும் மாறாக உள்ளது . நம் நாட்டு எல்லைக்குள் யாருமே வரவில்லை என்றால் எப்படி 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பதற்கும் பதிலில்லை.
4.இந்த நிகழ்வுகளை ஒட்டி அதிகாரப்பூர்வமாக தன் எதிர்ப்பை காட்டியிருக்கும் ஒரே நாடு அமரிக்கா மட்டுமே (எனக்கு தெரிந்த வரை ) . வேறு யாருக்குமே இதில் தேவையில்லாமல் தலையிட்டு சீனாவிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள விரும்பவில்லை.
இதுதான் நிதர்சனம். இந்த நிகழ்வுகளின் டைமிங் யதேச்சையானது அல்ல .இதில் எதுவுமே என் சொந்த கருத்தும் அல்ல. இவை எல்லாம் பொதுவெளியில் எல்லோருக்கும் கிடைக்கும் செய்திகளே. இந்த நிகழ்வுகளை கூட்டிக்கழித்து பார்த்தால் நான் முந்தைய இரண்டு பகுதிகளில் சொல்ல வந்ததன் சாரத்தை இந்த நிகழ்வுகளுடன் மிக எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்.
ஆஸி ,சீன எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருக்கும் நாடு அதை ராணுவ ரீதியாக பயமுறுத்துவதை விட சைபர் தாக்குதலால் வழிக்கு கொண்டு வருவது எளிது . ஆஸியில் நிகழ்த்தியதை இந்தியாவிலும் நிகழ்த்துவது கடினமே இல்லை . இது இந்தியாவுக்கும் “பீ கேர்புல்” என்று விடுக்கும் செய்திதான்.
பங்களாதேஷுக்கு வணிக ரீதியாக சலுகைகள் அளிப்பது economic diplomacy . எங்களை யார் எதிர்த்தாலும் தொல்லை கொடுப்போம் , யார் அமைதி காத்தாலும் அவர்களுக்கு சலுகை அளிப்போம் என்பது தானே இது . உலகின் மாபெரும் சந்தையான சீனாவுடம் சாதகமான வர்த்தக உறவை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

சீன வரைபடத்திலேயே கூட கல்வான் என்பது அவர்கள் பகுதியில் இருப்பதாக காண்பிக்கப்படுவதில்லை . கல்வான் என்னும் பெயரே கூட இந்திய பெயர் , அந்த இடத்துக்கு சீன மொழி பெயரே கிடையாது . இந்திய சீன எல்லையில் மொத்தம் 23 இடங்கள் “சர்ச்சைக்குரிய” இடங்களாக இருக்கு ஆனால் கல்வான் அந்த லிஸ்டில் கூட இல்லை . இப்படி இருக்க பிரதமர் யாருமே உள்ளே வரவில்லை என்பதான அறிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது ?!பேச்சு வார்த்தை பேரங்கள் நடக்கும் போது அரசு ஒரு குறைந்த பட்ச ரகசியத்தை காப்பது புரிந்துகொள்ளக்கூடியது தான் . ஆனால் ஏற்கனவே தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதே ?
கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுவல் நிகழ்ந்ததை உள்ளூர் செய்திகள் சொல்லும் முன்னரே அஸி செக்யூரிட்டி அனலிஸ்டுகள் சாட்டிலைட் படம் மூலம் துல்லியமாக காட்டிவிட்டார்கள் . ஆஸிக்கு தெரியும் என்னும் போது மற்ற பெரிய நாடுகளுக்கும் என்ன நடந்திருக்கிறது என்பது தெரியாமல் இருக்காது . ஆனால் இது குறித்து தெளிவான அதிகாரப்பூர்வ ஆட்சேபம் தெரிவித்தது அமெரிக்க மட்டுமே ? What does it say about the international power balance and where we stand ?
சீனா 1962 போருக்கும்பின் கல்வான் மீது எந்த வித உரிமை கோரலையும் முன்வைத்ததில்லை , இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அதிகாரப்பூர்வமாகவே கல்வான் எப்போதுமே எங்களுடையதுதான் என்று அடித்து விட்டிருக்கிறது.
இந்தப் பதிவுகளை எல்லாம் அத்துமீறலகள் என்று தான் தலைப்பிட்டிருந்தேன், ஆனால் இப்பொழுது அது ஊடுருவல் என்னும் புள்ளி நோக்கி நகர்ந்துவிட்டது. இன்னும் சில வருடங்களில் மெல்ல இந்தப்பகுதிக்கு ரோடுகளை போட ஆரம்பித்தால் அந்த புள்ளி அக்கிரமிப்பாக மாறிவிடும்.
இந்திய அரசு இதை உள்நாட்டு அரசியல் சமாளிப்பாக கருதி அணுகாமல் , இது குறித்த non-negotiable aspect என்ன என்பதை தெளிவாக நாட்டு மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் ,அதுவே சீனாவுக்கும் , உலகத்துக்குமான அறைகூவலாக அமையும்.
இது கல்வானோடு முடியும் விஷயமல்ல இன்னும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களிலும் நமக்கு சிக்கல் இருக்கு .கல்வான் பிரச்சனையை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது எதிர்காலத்தில் மற்ற எல்லை சிக்கல்களுக்கும் முன்னுதாரனமாக அமையும். We need to show the right kind of leadership and political will to tackle this , what is at stake here is more than just Galwan.
(முற்றும்)
(June-2020)
Leave a Reply