
Modi & A Beer படம் பார்த்தேன் , வழக்கமான சாதி சார்ந்த விவாதத்தை காதலில் இருக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு இடையே நிகழும் உரையாடலின் ஊடே பொதிந்து வைத்திருக்கிறார்கள் . புத்திசாலித்தனமான அணுகுமுறை . சாதி குறித்து பரஸ்பரம் பேசிக்கொள்ள இருதரப்பு மிக அணுக்கமான உறவில் அல்லது புரிதலில் இருக்க வேண்டும் , இல்லையென்றால் அந்த உரையாடல் எந்த நிமிடமும் ,தவறுதலாக பட்டாலும் வெடித்துச் சிதறும் கண்ணிவெடியாகவே அமையும்.
இதையே இரு நெருக்கமான நண்பர்களுக்கு இடையே அமைத்திருக்காலாம் ஆனால் அதில் கூட இப்படி பரஸ்பரம் இரு குடும்பங்களையும் இணைத்து பேசும் தருணங்கள் வராது. மாறாக இதை காதலிக்கும் ஆண் பெண்ணுக்கு இடையே அமைந்த உரையாடலாக அமைத்ததன் மூலம் இயக்குனர் உச்சகட்ட நெருக்கத்தையும் அதே சமயம் உச்ச கட்ட விலகலுக்கான சாத்தியத்தையும் சேர்த்து contrast ஆக காட்டியிருக்கிறார். முக்கியமாக திருமண பேச்சுவார்த்தையை ஒரு தருணமாக அமைத்ததன் மூலம் சாதி என்பதன் ஆதாரணமான விஷயமான endogamy யை நேரடியாக தொட்டிருக்கிறார்.
Statusquo வின் பிரதிநிதியாக பெண் , அதை கேள்விகேட்கும் பிரதிநிதியாக ஆண் . தற்காப்பவளாக பெண் தகர்க்க முனைபவனாக ஆண் . இருவர் நிற்கும் புள்ளியும் , அங்கிருந்து அவர்களுக்கு கிட்டும் பார்வையும் , வெவ்வேறானவை. இருவரின் அடுத்த கட்டங்களும் வெவ்வேறானவை.
இன்னொரு விதத்திலும் இந்த கதைச்சூழல் முக்கியமானது . இந்த கதை ஒரே சமயத்தில் இரண்டு தளங்களில் நிகழ்கிறது , ஒன்று ஒரு ஆணும் பெண்ணும் காதல் மணம் குறித்த மிக முக்கியமான தனி வாழ்க்கை முடிவையும் அது தொடர்பான சமூக கெடுபிடிகளையும் negotiate செய்யும் தருணம் . இன்னொன்று அந்த நெருக்கம் அளித்த உரிமையில் சாதிய உரசல்களையும் பொது வெளியில் சாதியில் புழங்குவது குறித்தும் சாதிய சமூக இழிவை இரு தனி மனிதர்கள் பேசிக்கொள்வது .
உரையாடலின் போக்கில் தனி வாழ்க்கை சிக்கலுக்கும் பொது வாழ்க்கை சிக்கலுக்கும் என்று ஒன்றிலிருந்து ஒன்றுக்கு இயல்பாக மாறிக்கொள்கிறார்கள். ஆனால் மெல்ல பொதுப்பேச்சு தனிவாழ்க்கை நோக்கை ஓவர்டேக் செய்து உரையாடலின் திசையை டாமினேட் செய்ய ஆரம்பிக்கிறது . ஒரு கட்டத்தில் அச்சு பாரம் தாங்காமல் முறிகிறது.
இயல்வாழ்க்கையில் இதுதான் நடக்கிறது இல்லையா? . மனிதர்கள் இயல்பாக எளிய மனங்கள் தான் , எளிய ஆசைகள் , எளிய உறவுகள் ,எளிய தேவைகள்.ஆனால் ஓரளவு அவர்கள் நெருங்கி வரும் போது இதுவரை கண்ணுக்கு புலப்படாடதாக இருக்கும் சாதியின் எல்லைகள் , மெல்ல மெல்ல உறுதியான கோடுகளாக பின் நெடுமதில் சுவர்களாக பூதாகர உருவம் கொள்கின்றன.
சாதி முதலில் ஒரு அரூவமான benign சொல்லாடலாக உணரப்பட்டு பின் உரையாடலின் போக்கில் சீக்கிரமாகவே இருவருக்குமான பரஸ்பர சிறையாகிவிடுகிறது . சாதியின் இந்த சிறைப்படுத்தும் தன்மையே இந்தப் படத்தின் மையமாகப் பார்க்கிறேன் (கூண்டில் இருக்கும் முயல்கள் ) . அவர்கள் இருவருமே சாதி குறித்து தத்தம் தனிப்பட்ட தரப்புகளை பேசிக்கொண்டாலும் , ஆயிரக்கணக்கான வருடங்களாக தொடர்ந்து வரும் சமூக நாடகம் ஒன்றின் தோல்பாவைகள் தான் அவர்கள்.
நான் சொல்ல வருவது தனி மனிதர்களுக்கு இதில் பெரிய பொறுப்பு இல்லை என்னும் அர்த்தத்தில் அல்ல தனி மனிதர்கள் கையில் நிறைய இருக்கிறது . மாறாக சாதி என்பதை மிகச்சாதாரணமாக எடை போட்டுவிடும் நம் இயல்பையே நான் இங்கு சுட்ட வந்தேன்.இவர்கள் இருவரும் மோதிக்கொண்ட புள்ளி அந்த சாதிய அறியாமையில் இருந்து எழுந்ததே
சாதி என்பது பிரமிட் ஸ்கீமுக்குள் இருக்கும் இன்னொரு பிரமிட் ஸ்கீம் . படத்தில் பேசப்படும் மோடி ஆதரவு , பிரிவிலேஜ் , ரிசர்வேஷன் , social disengagement , சமூக நீதி , பொறுப்பு , குற்ற உணர்வு ( அல்லது அதன் அவசியமின்மை) என்று எல்லாமே பேசப்பட வேண்டியவைதான் , மிக அவசியமானவையும் கூட.இவைகள் இன்றைக்கான உடனடி அவசியங்களை பேசுபவை.ஆனால் அதைவிட முக்கியம் சாதியின் பதினாராயிரம் கரங்களின் பலத்தையும் , அது இந்தியர்களின் வாழ்வின் ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் நுழைந்து தன்னை இருத்திக்கொள்ளும் தன்மையையும் புரிந்துகொள்வது . நானெல்லாம் சாதி பார்ப்பதில்லை சார் என்று எளிதாக சொல்லிவிடலாம் ஆனால் சாதி என்னவோ நம் எல்லோரையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது , we can’t escape that.நாம் அதை விட்டாலும் நம்மை அது விடாது.
நடைமுறையில் சாதியின் அரசியல் சார்ந்த weaponised வடிவைத்தான் நம்மில் பெரும்பாலானோர் அறிமுகம் செய்து கொண்டிருபோம் ஆனால் இதை தவிர்த்த அதன் சமூக , மனோவியல் தளங்களையும் அதன் பரிணாமத்தையும் , இயங்கியலையும் , காலத்திற்கு ஏற்றவாறு தன்னை உருமாற்றிக்கொள்ளும் தன்மையையும் சேர்த்தே நாம் சாதியை அறிய வேண்டும். இல்லையென்றால் சமூக புழக்கத்தில் இருக்கும் சாதி சார்ந்த ஏதேனும் ஒரு trope க்குள் மாட்டிக்கொள்வோம்.
சாதி ஏதோ மனிதர்களில் இருந்து தனிப்பட்ட ஒரு சட்டகம் என்றோ , அமைப்பு என்றோ நான் சொல்ல வரவில்லை , humans played an integral part in establishing and perpetuation it over centuries.ஆனால் அந்த பரிணாமத்தில் அது lived experience மட்டுமாக இல்லாமல் கருத்தியலாக , சமூக பிடிமாணங்களாக , அரசியலாக சட்டங்களாக , வழக்கங்களாக , விழுமியங்களாக சமூகத்தின் எல்லா தளத்திலும் தன்னை பொருத்திக்கொண்டு ஆங்காங்கே படிந்துவிட்டது.இவைகளை மொத்தமாகவும் தனித்தனியாகவும் பிரித்தறிதல் நீண்ட கால நோக்கில் சாதியை கையாள மிகவும் அவசியமாகிறது.இதைத்தான் படத்தின் இறுதியில் வரும் அந்த முயல் பாட்டு சுட்டுகிறது.
அந்தப் பெண் இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்திருந்தார் ,கதைப்படி இருவருமே உண்மையிலேயே பரஸ்பர விருப்பம் கொண்டவர்களாகத்தான் வெளிப்படுகிறார்கள் .When they walk out beyond the pain they both will be wondering what just happened and why things fell apart so quickly.
இந்தக்கேள்வியை சரியானபடி கேட்டுக்கொண்டால் அவர்கள் இருவரும் இந்த வலைப்பின்னலில் இருந்து தங்களை மெல்ல விடுவித்துக்கொள்ள முடியும் , அதற்கான இன்னசென்சும் நெருக்கமும் அவர்களிடம் இருக்கு . இந்த பள்ளத்தை அவர்கள் கடந்துவிட்டால் பின் ஒட்டு மொத்த சாதிய கட்டுமானத்தை நோக்கியும் அவர்கள் அதே கேள்வியை வைக்கமுடியும், வைப்பார்கள் என்று நம்புவோம்.
#ModiAndABeer #DhinahChandraMohan #PaaRanjith #Caste #Neelam #KadhaiKelu
(06-June-2020)
Leave a Reply