
அமெரிக்காவின் அடிமைகளாக இருந்த கருப்பர்கள் முதல் முதலாக அமெரிக்க சமூகத்தின் மையத்துக்குள் வந்தது அவர்களின் இசை மூலமாகத்தான். ஜாஸ் , காஸ்பல் இசை , ப்ளூஸ் என்று 50 – 60 களில் பெரும் சமூக எழுச்சியை உருவாக்கியதில் அவர்களின் இசைக்கு பெரும் பங்கு உண்டு.
இந்த இசை வடிவங்களின் மூலம் அவர்கள் தங்களின் தனித்துவ அடையாளத்தை திரட்டிக்கொண்டார்கள் .அதே சமயம் ஒடுக்குமுறையில் அழுத்தப்பட்ட வாழ்விலிருந்து பீறிடும் சுதந்திரத்திற்கான விழைவாகவும் அது வெளிப்பட்டது. பள்ளிக்கூடங்களிலும் , உணவு விடுதிகளிலும் , பேருந்துகளிலும் பிரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு , சிதறுண்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் இசையின் மூலம் தங்களை இணைத்துக்கொண்டனர்
எந்த விடுதியில் கருப்பர்கள் வெள்ளையர்களுடன் சேர்ந்து உணவு உண்ண முடியாதோ அதே உணவு விடுதியில் கருப்பர்களின் இசையை கேட்க வெள்ளையர்கள் அலைமோதினர் எந்த பாகுபாட்டையும் தாண்டி அந்த இசையின் ஜீவன் , துள்ளல் அவர்களை உள்ளிழுத்துக்கொண்டது.இசை என்பது சுதந்திரத்தின் அடையாளமாகியது , அடையாளத்தின் சுதந்திரமாகியது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான வருடங்களில் தமிழ் பிரக்ஞை தன்னை மெல்ல மெல்ல திரட்டிக்கொள்ள ஆரம்பிக்கையில் அது மொழி வாயிலாகவும் , கோட்பாடு ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் தன்னை வெவ்வேறு வழிகளில், வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.இந்தியா முழுவதுமே மக்கள் உணர்வுபூர்வ திரளாக கூடிய இடம் , திருவிழாக்களுக்கு அப்புறமாக சினிமா என்றாகியது.இந்தப்புள்ளியில் தான் காலம் விரித்த ராஜ பாட்டையில் இசை என்னும் தேரில் ஒரு ராஜகுமாரனாய் இளையராஜா வந்திறங்குகிறார், the right person with the right goods at the right time.
தமிழ் consciousness என்பதை தன் இசையின் மூலம் விசாலமாக்குகிறார் , அதில் வண்ணங்களை சேர்க்கிறார்.எப்படி தமிழ் consciousness ல் அறம் என்பது வள்ளுவரின் மேல் அமைந்திருக்கிறதோ, எப்படி கவிதை என்பது கம்பனில் நிலைகொண்டிருக்கிறதோ அதே போல நம் உணர்வுகளின் அழகியல் ராஜாவின் இசை மேல் உருக்கொள்ள ஆரம்பிக்கிறது .
ராஜாவின் இசையில் வரும் வயலினோ , ஷெனாயோ அந்த கருவியின் சாத்தியக்கூறோ அல்லது அவரின் இசை மேதமையோ மட்டுமல்ல அது இது வரை ஒலித்திராத நம் அகத்தின் இசையும் கூட.இளையராஜா அதை நமக்காக இசைத்தார் , அதே சமயம் நம் இருப்பையும் அடையாளத்தையும் இசையாக்கினார். இந்தப்புள்ளியில் ஆரம்பித்தே தமிழர்களின் ராஜா பித்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.இதன் பொருள் வள்ளுவரும் , கம்பனும் , ராஜாவும் ஒன்றென்பதல்ல மாறாக இன்றைய தமிழ் பிரக்ஞையின் வேறுபட்ட அடிப்படை கூறுகளை இவர்கள் தனித்துவத்தோடு கட்டமைத்திருக்கிறார்கள் அல்லது வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதே.
ராஜாவின் பங்களிப்பு இசைக்கும் வெளியேயும் நிகழ்ந்த ஒன்று .இந்த அடையாளமாகும் , அடையாளாப்படுத்திக்கொள்ளும் தன்மை தான் ராஜாவின் இசை மேலே ஒரு மகுடமாக நின்றிருக்கிறது ,அது இசைக்கு மட்டுமே கிடைத்த அங்கீகாரம் அல்ல.
ராஜாவுக்கு முன்னர் இசை இல்லையா அவருக்கு பின் இசை இல்லையா என்று ஒரு கேள்வி எழலாம் , கண்டிப்பாக இருக்கு, இருக்கும். ஆனால் ராஜா உருவாக்கியது இசையில் நிகழ்ந்த ஒரு தனித்துவ தமிழ் வார்ப்பை.அந்த தனித்துவ அழகியலை , தமிழ் சமூகத்தின் செவி அந்தரங்கமாய் அறிந்திருந்தது .தமிழ் சமூகம் தனக்கான தனித்துவமான இசையை ராஜாவின் இசையில் தான் முதன் முதலில் கண்டுகொண்டது .
ராஜாவின் இசையை , அவரின் இசை உருவாக்கிய உணர்வு நிலைகளை அப்படியே வரித்துக்கொண்டது தமிழ் சமூகம் . ராஜா மூலமாக தமிழ் சமூகம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு தன்னை இன்னுமே அழகியல் ரீதியாக அடையாளபடுத்திக்கொண்டது எனவே தான் தமிழுக்கு வெளியே அல்லது இந்திய இசை கலைஞர்களுக்கு வெளியே அவரை ஒப்பிடுவது பொருத்தமில்லாமல் போகிறது . அப்படி அவர் வெளியே போகும் போதும் வெறும் notes & chords ஆகவே போகிறார்.
இளையராஜாவை ரசிப்பது நம்மையே நாமே ரசித்துக்கொள்வதுதான்.
Leave a Reply