
நண்பர் Aravindan Kannaiyan பக்கத்தில் , சமீபத்தில் வெளியான, இளையராஜா இசையமைத்த, தேசிய ஒருமைப்பாடு தீம் பாடல்களை கேட்டு நொந்து போய் ஒரு பதிவிட்டிருந்தார். ஏன் இப்படி எந்த ஆர்டிஸ்டிக் மெரிட்டும் இல்லாமல் ( குறிப்பாக பாடல் வரிகள் ) மந்தமான பிரச்சார படம் போல இருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்த போது பிலிம் டிவிசன் சார்பாக ஆவணபட இயக்குநர் எஸ்.சுகதேவ் உருவாக்கிய “An Indian Day” படம் ஞாபகத்துக்கு வந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்து இருபது ஆண்டுகளை குறிக்கும் விதமாக 1967 ல் எடுக்கப்பட்ட ஆவணப்படம். அந்த காலகட்ட இந்தியா குறித்து நமக்கு காணக்கிடைக்கும் மிகச்சிறந்த ஆவணப்படங்களில் ஒன்று இது என்று தாராளமாகச் சொல்லலாம் . துண்டு காட்சிகளாக எந்த வித கோர்வையில் இல்லாமல் படம் ஒவ்வொன்றாய் காட்டிச் செல்கிறது .அதில் வரும் காட்சிகள் சில…
-Thunder from peking உம் திருவருட்செல்வரும் படமும் ஒரே சமயம் தியேட்டர்களில் ஓடியிருக்கிறது .
– 67 ல் கோககோலா இருந்திருக்கிறது , ஒரு கேஸ் ஆறு ரூபாய்
-சபையர் தியேட்டரில் ஜாம் செஷன்ஸ் நடந்திருக்கிறது . .
-சோழமண்டலத்தில் இளமையில் M.F .ஹூசைன்
– சினிமாக்கள் ,தொழிற்சாலைகள், பிச்சைக்காரர்கள் ஹிப்பிகள்
– மும்பையில் சிவசேனா கட்சி ஆர்பாட்டங்கள் (“Rain will flood , Shiv Sena in our blood ” )
– பாபா அணுமின் நிலையம் ,திறந்தவெளி பள்ளிக்கூடங்கள்
– திருமணங்கள், விழாக்கள், வழிபாடுகள்
– சண்டிகர் நகர வடிவமைப்பு ,டிரான்சிஸ்டர் தயாரிப்பு ..etc
இந்தப் படத்தின் சிறப்பு இதையெல்லாம் அது ஆவணப்படுத்தியிருக்கிறது என்பதல்ல(அதுவும் முக்கியம்தான் ) ஆனால் அதை எப்படி செய்திருக்கிறது என்பதில் தான் அது கலை அந்தஸ்து பெறுகிறது. முக்கியமாக படத்தில் வாயஸ் ஓவர் எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதல் , ஆங்காங்கே இயல்பான சூழல் ஓசைகளையும் , இசையையும் மட்டுமே பயன்படுத்தியிருப்பார்.பாபா அணுமின்நிலையம் காட்டும் காட்சி நல்ல உதாரணம்.
சுக்தேவின் இயல்பான விஷுவல் சென்ஸ் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்பட்டிருக்கும். இந்தியாவின் ஒவ்வொரு முகத்தையும் தனக்கே உரிய பார்வையில் , அதே சமயம் அதன் ஜீவனில் எந்த குறுக்கீடும் நிகழ்த்தாமல் காட்டியிருப்பார். வாய்ஸ் ஓவர் இல்லாவிட்டாலும் கூட நெரடிவை புத்திசாலித்தனமாக பயன்படுத்தியிருப்பார்.

திறப்பு காட்சியிலேயே மகராஜா ஒருவருக்கு போன் அழைப்பு வருகிறது , சிறிது நேரம் அதை ஹோல்டில் வைத்துவிட்டு அப்படி இங்கே யாரும் இல்லை என்று சொல்லி அழைப்பு துண்டிக்கப்படும் . இன்னொரு காட்சியில் எவரெடி கம்பெனியில் pay slip அச்சடிக்கபடுவது காண்பிக்கப்படும்.அந்த ஒரு காட்சியிலேயே அன்றைய ஊதிய அளவு , வரிகள் , விதிகள் , அந்த வேலையின் இயந்திரத்தன்மை என்று எல்லாவற்றையும் அழகாக காட்டிவிடுவார்.
அறுபதுகளின் சிகப்பு நாடா கெடுபிடிகளின் இடையே , அரசு சார்பில் , அரசு அளித்த நிதியில் இப்படி ஒரு கலாபூர்வமான ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதே ஒரு பெரிய சாதனைதான்.இந்தப்படத்தில் நாய் ஒரு சைக்கிள் மேல் ஒன்றுக்கு போகும் காட்சி பிலிம் டிவிஷனால் ஆட்சேபிக்கப்பட்டு நீக்கப்பட்டது, பின்னர் அமைச்சர் ஒருவரின் பரிந்துரைக்குப் பின் தான் அந்த காட்சி மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

சுக்தேவ் தன் படங்களுக்காக ஒலி , எடிட்டிங் எல்லாம் அவரே செய்திருக்கிறார். தன் படம் ஒன்றின் எடிட்டிங் வேலையில் ஈடுபட்டிருக்கையில் தான் மாரடைப்பு வந்து காலமானார். சுகதேவ் இன்னும் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர் , பேசப்பட வேண்டியவர் .இன்று நமக்கு ஐபோனிலேயே மொத்த படமும் எடுக்க முடிகிற அளவு தொழில்நுட்பம் இருக்கிறது ஆனால் நம் ஆவணப்பட தரம் என்பது பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை , நம் சமகால சூழலை ,சிக்கல்களை யாராவது இது போன்று ஆவணப்படமாக்கினால் நன்றாக இருக்கும்.
(31-May-2020 )
Leave a Reply