
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் மினியாபொலீஸ் நகரத்தில் ஒரு கருப்பினத்தவர் போலீஸ் கைது நடவடிக்கையின் போது மரணித்த (கொல்லபட்ட ! ) வீடியோ பார்த்ததும் , முதலில் தோன்றியது ராட்னி கிங் சம்பவம்தான் . லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் கைது முயற்சியை எதிர்த்ததற்காக ராட்னி கிங் என்னும் கருப்பினத்தவர் நாலு போலீசாரால் மிகக் கடுமையாக தாக்கபட்டார்.இந்த நிகழ்ச்சி உலகளாவிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இது நடந்தது 1991 ல். அப்போதெல்லாம் இன்று போல எல்லோர் கையிலும் செல்போன் இருந்திருக்கவில்லை , CCTV காமெராக்கள் கூட மிக அரிது , ஆனால் அதிர்ஷடவசமாக ஒருவர் இந்த காட்சியை தன் வீடியோ காமிராவில் பதிவு செய்கிறார் . இந்த வீடியோ உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களின் வெளியாகி பெரும் பரபரப்பையும் கண்டனத்தையும் உருவாக்கியது .
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு போலீஸ்காரர்களும் நிரபராதிகள் என்று பின்னர் விடுவிக்கபட்ட போது தான் பிரச்சனை பூதாகரமாகியது . LA நகரத்தின் கருப்பின மக்கள் வெண்டு எழ மிகப்பெரிய கலவரம் வெடித்தது , கடைகளும் அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டு , சூறையாடப்பட்டு , தீக்கிறையாக்கபட்டன .இறுதியாக கலவரத்தை அடக்க அமெரிக்க ராணுவமே வரவழைக்கப்பட வேண்டியதானது , 60 க்கும் மேற்பட்டோர் அந்தக்கலவரத்தில் உயிரிழந்தனர்.
மினியாபொலீஸ் கைது சம்பவத்தில் , சந்தேகத்துக்குரிய நபரை ஒரு போலீஸ் அதிகாரி தரையில் குப்புற வீழ்த்தி அவர் கழுத்தில் தன் முழங்கால்களினால் அழுத்தி அவரை தரையோடு நசுக்கியிருக்கிறார். தன்னால் மூச்சு விட முடியவில்லை என்று அவர் பலமுறை கதறியும் போலீஸ்காரர் தன் அழுத்தத்தை தளர்த்தவில்லை , சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டவர் இறந்துவிடுகிறார் .
இதை மொபைல் போனில் படம் படித்த ஒருவர் பகிர்ந்துகொள்ள , உலகெங்கிலும் இது பிளாஷ் ஆகியது .கடந்த நாலு நாட்களாக மினியாபொலீஸ் நகரத்தில் ஆங்காங்கே கலவரங்கள் நடந்து வருகின்றன . கலவரக்காரர்கள் ஒரு உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனையும் தீக்கிரையாக்கிவிட்டனர்.
இந்த நிகழ்வென்று இல்லை கடந்த சில வருடங்களாகவே கருப்பர்களுக்கு எதிரான போலீஸ் அடக்குமுறை குறித்த நிகழ்வுகள் மாதம் ஒன்று என்னும் அளவிலேயே வந்துகொண்டு தான் இருக்கின்றன . இதன் பொருள் திடீரென்று இவை அதிகரித்து விட்டன என்றில்லை . இப்போதுதான் இவை அதிகம் கவனமாக்கப்படுகின்றன . போலீஸ் பாடி கேம் , CCTV , செல்போன் என்று பரவலாக இத்தகைய நிகழ்வுகள் பதிவு செய்யபடுகின்றன . இந்த நிகழ்வு கூட பதிவு செய்யபடாமல் போயிருந்தால் suspect resisted arrest , attacked officers , force had to be used என்றே ரெக்கார்டுகளில் பதிவு செய்து மூடப்பட்டிருக்கும்.
இப்போது இந்த நிகழ்வு ஒரு பக்கம் இருக்க இதனால் ஆரம்பித்த கலவரங்கள் , சூறையாடல்கள் எதிர்மறை கவனம் பெருகின்றன . இவை “பாத்தீங்களா சார் இவனுக இப்படிதான்” என்னும் வகை கதையாடல்களுக்கு துணை போகின்றன . அமெரிக்க அதிபர் If you loot , we will shoot என்று டிவீட்டுகிறார்.இது ஒரு விஷச்சூழற்சி . ஏற்கனவே பிளவுண்டிருக்கும் அமெரிக்க சமூகம் இதை முன்வைத்து இன்னும் விலக்கம் கொள்ளும் அபாயம் இருக்கிறது , இன்னும் ஒருவர் மீது ஒருவர் கண்மூடித்தனமான மூர்க்கம் கொள்ள ஆரம்பிப்பார்கள்,ஏற்கனவே ஆயுதமேந்திய விஜிலாண்டிகள் போலீஸுக்கு உதவுகிறோம் என்று வீதிக்கு வந்துள்ளார்கள்.
அமெரிக்காவில் race relations எனபது சிக்கலானது discrimination மிகவும் சிஸ்டமேடிக்கானது பல நூற்றாண்டு கால பின்புலம் கொண்டது slavery , confederation , lynching , Jim Crow laws , Rosa parks , Martin Luther King , black incarceration என்று கசப்பான வரலாற்றை கொண்டது , அங்கு ஆரம்பித்து இன்று ஒபாமாவை நீ அமெரிக்கனே இல்லை என்பதாக நிறுவும் புள்ளி வரை வந்திருக்கிறது .
சற்றே முன் வந்த தகவலின் படி அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கிறார் , third degree murder என்னும் குற்றச்சாட்டின் கீழ். இந்த கைது நிலமையை கொஞ்சமாவது கட்டுக்குள் கொண்டு வரும் என்று நம்புவோம் , ராட்னி கிங் விஷயத்தில் போன்ற விஷச்சுழற்சியில் இதுவும் சிக்கிவிடக்கூடாது .
முக்கியமாக கருப்பர்களுக்கு எதிரான போலீசின் கடுமைப் போக்கு தேவையாக அளவு ஆராயப்பட்டு நிறுவப்பட்ட ஒன்று , இதில் மிக அடிப்படையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் தொடரவே செய்யும் . தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக மங்கலாகவே தென்படுகின்றன.
இத்தகைய சம்பவங்களை இந்திய சூழலுக்கும் எளிதாக பொறுத்திப்பார்க்க முடியும் , இவர்களை இப்படித்தான் என்னும் prejudice நம் சமூகத்திலும் மிகப்பரவலகாக இன்றும் காணப்படும் விஷயமே . இப்போது குறைந்தபட்சம் நாம் செய்யக்கூடுவது இதுபோன்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதும் , அடையாளப்படுத்துவதும் , விவாதிப்பதுமே.
(30-May-2020)
Leave a Reply