
இந்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக ஒதுக்க வேண்டியிருக்கும் மொத்த தொகை கிட்டத்தட்ட 20,000 கோடிகள் . இந்த அளவு பிரமாண்டமான கட்டுமானத் திட்டம் என்றைக்குமே குறித்த செலவில் நடந்ததாய் சரித்திரமே இல்லை எனவே குறைந்தது மேலும் ஒரு 5000 கோடிகளாவது கூடுதலாக செலவாகும் .கடைசி நேர திட்ட மாற்றங்கள் ,எதிர்பாரா இடையூறுகள் , பொருட்கள் விலையேற்றம் , தாமதங்கள் , ஊழல் etc . )
இந்த பணத்துக்கு கிட்டத்தட்ட 40 % இந்தியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க முடியும் . இந்த விஸ்டா திட்டம் கொரோனா பாதிப்பு இல்லாமலேயே சர்ச்சைக்குரிய திட்டமாக பார்க்கப்பட்டது . ஏற்கனவே உள்ள கட்டிடங்கள் வசதிகள் போதுமானதாக இருக்கும் போது அதை இடித்து புதிதாக கட்டுவது அவசியமா ,அப்படி இடிக்கப்படும் கட்டிடங்களின் heritage மதிப்பு என்றெல்லாம் பல விமர்சனங்கள் எழுந்தன .
இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் , கொரோனா இரண்டாம் அலையில் நாள் ஒன்றுக்கு 4000 பேருக்கு மேல் இறந்துகொண்டிருக்கையில் இந்த திட்டத்தை பிடிவாதமாக தொடர்வது நியாயப்படுத்தவே முடியாத செயல் என்றுதான் தோன்றுகிறது . இந்த நாலாயிரம் என்ற என்ணிக்கையே குறை எண்ணிக்கைதான் குறைந்த பட்சம் இதைவிட மூன்றிலிருந்து ஜந்து மடங்காவது உயிரிழப்பு நேரிட்டிருக்கு என்று கணக்கிடுகிறார்கள் . இவ்வித under counting பல நாடுகளிலும் பரவலாக ஏற்பட்டது என்றாலும் கூட இந்தியாவில் கிராமப்புறங்களில் நிகழும் கோவிட் மரணங்கள் பெரும்பாலும் கணக்கில் வருவதே இல்லை .
உடல்களை அடக்கம் செய்யக்கூட வசதி இல்லாத மக்கள் சடலங்களை ஆற்றில் தள்ளிவிட்டு பிரதமரின் தொகுதியிலேயே நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம் .இதில் மத்திய / மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்தாமல் விஸ்டா திட்ட வேலைகளை essential services என்று வகைப்படுத்தி தொடர்ந்து முன்னெடுப்பதைகாணும் யாருமே கண்டிக்கவே செய்வார்கள் , இதையே நாம் சர்வதேச ஊடகங்களிலும் பார்க்கிறோம்
இது ஒன்றும் தவிர்க்க முடியாத அல்லது குறைந்த பட்சம் ஒத்திப் போட முடியாத திட்டம் அல்லவே . கட்டியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தால் கூட கொரோனா கட்டுக்குள் வந்தபிறகு கூட இந்த வேலைகளை ஆரம்பித்து செய்யலாமே .
பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி அளித்தால் அதன் மூலம் அரசுக்கு ஆககூடிய மொத்த செலவு 67 ஆயிரம் கோடி . இதை மத்தியஅரசே கூட முழுதும் செய்ய வேண்டியதில்லை இதில் மூன்றில் ஒரு பங்கை மத்திய அரசு செய்தால் கூட போதும் மீதியை மாநிலங்களை ஏற்கச் சொல்லலாம். பொது சுகாதாரம் மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும் இது போன்ற பெருந்தொற்று காலங்களில் மத்திய அரசுக்கு கூடுதல் பொறுப்பு வந்து சேர்கிறது.
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போது 50 % மருத்துகளை மற்றும் மத்திய அரசுக்கு விற்றால் போதும் ( தலா 150 ரூ ) மீதி உள்ளதில் 25 % மாநிலங்களுக்கு விற்கலாம் , மாநிலங்களுக்கு விலை கூடுதல் ( தலா 400 ரூ) மீதமுள்ள 25 % உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் ( தலா 600 – 1200 ரூ ) .
இது போன்ற tiered pricing முறைக்கு அரசு சொல்லியிருக்கும் காரணம் . மத்திய அரசு தடுப்பூசிகளை அதிக அளவில் வாங்குவதால் அதற்கு விலை குறைவாகவும் மாநில அரசுகளுக்கு விலை அதிகமாகவும் வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்கிறது . சரி, தனியாருக்கு கூட லாபத்துக்கு விற்பது போகட்டும் ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் இங்கு சந்தை போட்டியாளர்களா என்ன ? மொத்தமாக 75% சதம் மருந்துகளை மத்திய அரசே வாங்கி மாநிலங்களுக்கு சலுகை விலையில் அளிக்கலாமே , அதாவது 150 ரூபாய்க்கு . ஒரு குடிமகனின் உயிரின் மேல் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கு இருக்கும் அக்கறை வேறுபடுமா என்ன ?
இது சாதாரண காய்ச்சல் மருந்தோ அல்லது லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே தேவைப்படும் ஒரு பிரத்தியேக மருந்தோ அல்ல . இது கோடிக்கணக்கான மக்களுக்கு உடனடியாக தேவைப்படும் உயிர்காக்கும் மருந்து . இந்த சூழ்நிலையில் அதை market forces , price discovery போன்ற சந்தை நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவது எப்படி அறமாகும் , இதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?
பொருளாதார நோக்கிலும் இது பெரிய சுமை கிடையாது , இதனால் நம் தேசம் பெறப்போகும் லாபத்தை கணக்கிடும் போது இந்த தடுப்பூசி செலவு நகத்தால் கிள்ளி கொடுப்பது போன்றது தான் . கோவிட் முதல் அலையில் நடந்த லாக்டவுனில் ஒவ்வொரு நாளுக்கு இந்தியா ஏதிர் கொண்ட பொருளாதார இழப்பு நாளொன்றுக்கு சராசரி 32 ஆயிரம் கோடி . நாடு தழுவிய 21 நாள் முழு அடைப்புக்கு மட்டும் நாம் எதிர்கொண்ட மொத்த பொருளாதார இழப்பு கிட்டத்தட்ட 7 லட்சம் கோடிகளுக்கு பக்கம் .இந்த இரண்டாம் அலையிலாவது நாம் அந்த பாடத்தை கற்றிருக்க வேண்டும் இல்லையா ?
போனமுறை வெறும் பொருளாதார இழப்பு தான் இந்த முறை தினப்படி ஆயிரக்கணக்கான நேரடி உயிரிழப்புகள் .இது தேசத்தின் மீதும் சமூகத்தின் மீதும் உருவாக்கும் வன்முறை ஒரு வடுவாக நெடுங்காலம் நீடித்திருக்கும் . எனவே அந்த 67 ஆயிரம் கோடி தடுப்பூசி செலவு என்பது அதன் மூலம் நாம் தடுக்க முடியும் பெரும் பொருளாதார சரிவு மற்றும் விலை மதிப்பற்ற உயிர்களின் இழப்புக்கு முன் ஒன்றுமே இல்லை .
சில தினங்களுக்கு முன் இதையெல்லாம் அரசுக்கு விளக்கி (!) மொத்தம் 12 எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள் . தற்போதைய சூழலில் இந்த பேரழிவில் இருந்து நாம் வெளிவர ஒரே வழி போர்க்கால நடவடிக்கையான 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக அளிப்பது தான் . இதை மத்திய அரசே முன்னின்று அதனிடம் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்து துரிதப்படுத்த வேண்டும் என்று.
மத்திய அரசு இதன் பொருட்டு விஸ்டா திட்டத்தை ஒரு வருடத்துக்காவது தள்ளி வைத்துவிட்டு அந்த பணத்தை தடுப்பூசிகள் வாங்குவதிலும் ,முடக்கத்தில் இருக்கும் மக்களுக்கு நிதி உதவியாகவும் உணவளிக்கவும் செலவளித்தால் அதன் மூலம் ஈட்டக்கூடிய நல்லெண்ணம் அபரிமிதமானதாக இருக்கும் .
இதை செய்யத்தவறும் சூழ்நிலை ஏற்பட்டால் அரசு தன் மக்களின் உயிருக்கு போதிய முன்னுரிமை ( priority ) அளிக்கவில்லை என்றே பொருள் படும் . அப்படி நடக்கும் பட்சத்தில் அதற்கு அரசு அளிக்கும் எந்த ஒரு விளக்கமாக இருந்தாலும் அது அறமற்றதாகவே இருக்கும் .
Leave a Reply