
“கோவிந்தன் சிந்தனை அடிப்படையில் ஒரு ராடிகல் ஹூமனிஸ்ட். எம்.என்.ராயிடமிருந்து பெற்ற இந்தக் கருத்தாக்கத்தை தனது சுய சிந்தனை மூலம் விரிவாக்கம் செய்து கொண்டார். அதை இப்படிச் சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன்.’ மனிதனின் படைப்பாற்றலுடன் இணைத்துத்தான் சுதந்திரத்தைப் புரிந்து கொண்டார் கோவிந்தன். படைப்பு உருவாக்கத்தின் விதையும் அது முளை விட்டு வளர்வதற்கான சூழலும் அந்தக் கற்பனையில்தான் துலங்குகின்றன. இதில் தனிமனிதன் என்ற கருத்துக்கு அழுத்தம் அதிகம். ஆனால் அவனுடைய சமூக இயல்பை அந்த அழுத்தம் மறுப்பதில்லை. சமூகத்தை தனிநபருக்கு அப்பாற்பட்ட எதிர்த் துருவமாக நிறுத்துவது இல்லை.
தனி மனிதனிடம் ஒளிர வேண்டியதும் அவனுடைய அனுபவமாக மாறவேண்டிய இயல்புதான் சுதந்திரம். கலையும் பண்பாடும் அரசியலும் பேரழகுகொள்வது இந்த மதிப்பீட்டை வெளிப்படுத்தும்போதுதான். அதையே படைப்பாற்றல் எனலாம். புதுமை எனலாம்.அதன் எதிரி அதிகாரம். மனிதன் மனிதனாக இருக்க இந்த அதிகாரங்களிடமிருந்து விலகி ஓட வேண்டியிருக்கிறது. மனிதன்என்ற மதிப்பீட்டைப் புரிந்து கொள்ள இந்த அதிகாரமற்ற சுதந்திரச் சூழலை உருவாக்க வேண்டும். படைப்பாற்றல் வெளிப்படும் பின்புலத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு படைப்பின் நோக்கமும் படைப்பாளியின் நடவடிக்கையும் இந்த மானுடச் சூழலை உருவாக்குவதுதான்.”
-கவிஞர் சுகுமாரன் ( ஒரு உரையில் இருந்து )
நேற்று ஜெ வின் “எண்ண எண்ணக் குறையும்” சிறுகதை குறித்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன் . அந்தக் கதை எம்.கோவிந்தன் அவர்களின் ஆளுமையை தொட்டு எழுதப்பட்ட கதை . அதிலிருந்து எம்.கோவிந்தன் குறித்து நிறைய பேசினோம், அதன் பின்னும் அது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன் , சுரா, ஆற்றூர் ரவிவர்மா,ஜெ மேலும் பல கலைஞர்கள் , இதழாளர்கள் என்று கலை இலக்கிய உலகை பரவலாக பாதித்தவர் எம்.கோவிந்தன். முக்கியமாக அவர் உரையாடல்காரர் ஆனாலும் அவரின் பல புத்தகங்களும் வெளிவந்திருக்கிறன . அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை , இல்லாவிட்டால் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
(17 May 2020 )
Leave a Reply