
பெரிதும் அறியப்பட்ட சமகால ஜப்பானிய கலைஞரான யயோய் குஸாமாவின் ( Yayoi Kusama ) கலை உருவாக்கத்தை பார்க்கும் வாய்ப்பு இன்று கிட்டியது.தற்போது ஆஸி தலைநகரான கான்பராவில் , ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்தில் இது நிறுவப்பட்டுள்ளது .Experiential Art வகையில் வரும் இந்த‘கலை நிறுவல்’ பார்வையாளர்கள் இடையே மிகவும் பிரபலம் போலிருக்கிறது, வரிசையில் நின்று காத்திருந்து பார்க்கிறார்கள்.
அதே காலரியில் தான் மொனேவும் , ஜாக்ஸன் பொலாக்கும் இருக்கிறார்கள் . மொனேவின் ‘நீர் ஆம்பல்களின்’ முன் அமர்ந்திருந்து நிதானமாக அந்த ஒளித்தீற்றல்களுள் கரைந்து குளத்துள் ஆம்பலாக உணர்வது ஒரு அனுபவம் என்றால் இது போன்று கலைப்படைப்பினுள் நேரடியாக உள்நுழைதல் முற்றிலும் வேறான அனுபவம்.
இந்த கலை நிறுவலின் motif எளிமையானது. முழுதும் மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட ஒரு அறையில் சிறிதும் பெரிதுமாக கறுப்பு வண்ண போல்கா பொட்டுக்கள்.அந்த அறைக்கு நடுவே இன்னுமொரு சிறு அறை கண்ணாடியால் ஆனது , அந்த பெரிய அறையை அந்த சிறிய அறையின் வெளிப்புறம் பிரதிபலிக்கும் .அந்த சிறு கண்ணாடி அறையுள் தலை நுழைத்து பார்க்க ஒரு சிறு துளை , அதன் உள்ளே எல்லா பக்கங்களிலு மேலும் கண்ணாடிகள் .அதனுள் மஞ்சள் பூசணிகள் , சிறுதும் பெரிதுமாய் , அதே போன்ற கருப்பு பொட்டுக்களுடன் .
அவை ஒன்றை ஒன்று எல்லா திசைகளிலும் முடிவிலி வரை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். நாம் தலையை நகர்த்தினால் அதற்கு ஏற்ப மொத்த பிரதிபலிப்பு re-orient ஆகிவிடும் . சட்டென்று நாமே அண்ட சராசரங்களில் மத்தியில் இருப்பது போல தோன்றும் . நாம் ‘அசைந்தால் அசையும் அகிலம்’ போல.எண்ணிக்கை என்பதே பிரதிபலிப்பா? , வெளி என்பது கூட அப்படித்தானோ .அப்படியானால் எண்ணம் , பேச்சு , எழுத்து எல்லாமே பிரதிபலிப்புகள்தானே . நாம் அனைவருமே ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டிருக்கும் ஆடிகள் தானோ ?
இப்படி விசாரங்களை வைத்துக்கொள்ளாவிட்டாலும் கூட நல்ல ஒரு அனுபவம் இது . கான்பரா வருகை தரும் நண்பர்கள் அவசியம் பார்க்கவேண்டியது.
(11 April 2021 )
Leave a Reply