‘அறமென்ப …’

ஜெயமோகன் அவர்களின் ‘அறமென்ப..’ சிறுகதை குறித்த வாசக குறிப்பு

அறமென்ப சிறுகதை பிற கதைகளை காட்டிலும் மிகவும் நேரடியானது , வாசிக்க எளிமையானது அதனாலேயே மேலோட்டமான வாசிப்பில் சீண்டலாக தோன்றுவது . சிலருக்கு ஏழைகளை அவமானப்படுத்துவதாக தோன்றலாம் சிலருக்கு நான் அப்பவே நினைச்சேன் இப்படித்தான் ஏமாற்றுவார்கள் என்று தோன்றலாம் . ஆனால் இது ஒரு நேரடியான சமூக விமர்சன கதை அல்ல என்று நினைக்கிறேன்.

கதைக்களனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் “ரோட்டில் அடிபட்ட கிடக்கும் ஒருவரை காப்பாற்றுதல்” நமக்கு மிகவும் பழகிய ஒரு தீம் , வரதட்சனை கொடுமையை போல . அதை லேசாக சுட்டினாலே வாசகன் மனதில் அடுத்து என்ன நடக்கும் என்பது தொடர்பான பலவித எண்ணங்களும் அபிப்பராயங்களும் வரிசை கட்டி வந்துவிடும் . கதையே எளிதாக ஊகித்து விடலாம் என்று தோன்றும்.

பெரிய அவதானிப்புகளோ , ஆழமான குறியீடுகளோ அற்ற கதை ,வசனங்களாலே நடத்தி செல்லப்படுவது . இந்த எளிமையான கட்டமைப்பின் மேல் அறம் சார்ந்த சமகால புரிதல் ஒன்றை விவாதமாக நம்முன் வைக்கிறது . நடைமுறையில் சமகால அறமென்பது என்னவாக பொருள்படுகிறது எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆராய்கிறது. எனவே இந்தக் கதையை ஒரு விவாத களமாக கருதி அணுகுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

எல்லோருக்கும் அவரவருக்கான நியாயம் இருக்கிறது . அடிபட்டவரை மருத்துவமனையில் சேர்ப்பதை தான் செய்யும் ‘ஹெல்ப்’ பாக செல்வா நினைக்கிறான் . அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் திகைத்து நிற்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ‘ஹெல்ப்’ செய்வதாக வக்கீல்கள் நினைக்கிறார்கள் .செல்வாவுக்கு தனது எல்லைக்குள் நின்று ‘ஹெல்ப்’ செய்வதாக இன்ஸ்பெக்டரும் நினைக்கிறார் .

அது போலவே அவரவருக்கான கடமைகளும் , எல்லைகளும் போதாமைகளும் வெளிப்படுகிறது . நாங்க ஏழை – எங்க புள்ளைங்க ரோட்டில நிக்குது. நாங்க போலீஸ் – வழக்கில தீர்ப்பு சொல்வது எங்க கையில் இல்லை. நாங்க வக்கீல் – எங்க குறிக்கோள் நஷ்ட ஈடு மட்டுமே , சட்டம் அதக்கு ஒரு கருவி மட்டுமே.

அதே சமயம் ஒருவரை இன்னொருவர் சார்ந்தும் இருக்க வேண்டிய சூழல் . வக்கீலுக்கு போலீஸ் , போலீஸுக்கு வக்கீல் , ஏழைகளுக்கு வக்கீல் , செல்வாவுக்கு நண்பன் என்று . சமூகம் என்பது இந்த பரஸ்பர உறவுகளும் , கொடுக்கல் வாங்கல்களும் , சார்ந்திருத்தலும் உதவுவதும் உள்ளடக்கிய சிக்கலான அமைப்பு . செல்வா குற்றமற்றவன் என்று எல்லோருக்குமே தெரிகிறது , செல்வாவை மாட்டி விட வேண்டும் என்பதும் யார் எண்ணமும் அல்ல , இது எப்படியும் ஒரு பேரத்தில் தான் முடியும் என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது.

“ஐ வில் சேவ் ஹிம்” என்று தன்னம்பிக்கையுடன் கிளம்பும் செல்வாவின் லட்சியவாதம் ஒன்றன் பின் ஒன்றாக அடி வாங்குகிறது .இறுது தருணம் வரை செல்வா நான் நல்லது செய்தேன் , நான் நல்லவன் எனக்கேன் இப்படி என்பதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறான்.இருண்ட ஒரு அறைக்குள் அவரவர் கையில் ஒரு உள்ள டார்ச் லைட்டை கொண்டு என்ன தெரிகிறது என்று அவரவர் சொல்கிறார்கள் , செல்வா உட்பட . பின்னர் ஒரு புள்ளியில் மொத்த விளக்குகளும் செல்வாவின் மனதில் ஒளிரும் போது ‘ஆமா இப்படித்தானே இருக்கும் வேறெப்படி இருக்கும்’ என்னும் புரிதலும் ஏற்பும் நிகழ்கிறது .

அவன் உதவ நினைப்பது மட்டுமே அவன் கையில் உள்ளது மற்றோர் எப்படி அதை எப்படி பொருள் கொள்வார்கள் , கையாள்வார்கள் என்பது அவன் கையில் இல்லை . கதையின் இறுதியில் எல்லோராலும் இழுத்தடிக்கப்பட்டு வெறுத்துப்போய் மருத்துவமனை வெளியே நிற்கையில் தன்னிடம் கையேந்தும் கிழவிக்கு செல்வா பணம் கொடுக்கும் புள்ளியில் அது அவனுக்கே ஊர்ஜிதம் ஆகிறது . முக்கியமாக பணத்தை அளித்த பின் செல்வா கூறும் வார்த்தைகள்.

இந்த சூழலில் அதிகபட்ச moral awareness கொண்ட ஒரு ஆள் என்றால் அது செல்வா மட்டுமே , அது சாத்தியமாகும் சாதகமாக சூழலில் அவன் வாழ்வில் அமைந்திருக்கிறது .அதை அவன் ஒரு moral responsibility ஆக உணரும் தருணமே கதையின் மையம் அதுவே அங்கு அறமாக திகழ்கிறது . அறம் திகழ்வெதென்பது அதன் அனைத்து விளைவுகளோடும் தான்.

சிறுகதைக்கான சுட்டி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: