
ஒட்டு மொத்த பொது போக்குவரத்தில் பேருந்து இணைப்புகளை ‘கடைசி கண்ணி’ என்று சொல்வார்கள் அதாவது last mile connectivity .பொது போக்குவரத்தில் அதிகமாகவும் அன்றாடமும் பயன்படுத்தப்படுவது இந்த ‘இறுதி மைல்’ தொடர்பே .பெரும்பாலான நம் அன்றாட பயணங்கள் ஒரு 50-100 கிலோமீட்டருக்கும் நிகழ்த்தப்படும் பயணங்களாகவே இருக்கும்.இதை பூர்த்தி செய்ய பேருந்துகளை விட சிறப்பான ஒரு வழி இல்லை என்று தான் சொல்லவேண்டும்
அமெரிக்க நகரங்கள் கார்களை மையமா வைத்து வடிவமைக்கப்பட்டவை என்பார்கள் , அது உண்மை தான் . சொந்தமாக கார் வசதி இல்லாமல் அமெரிக்காவில் பொது போக்குவரத்தை நம்பி மட்டுமே பயணம் செய்வது எவ்வளவு சாத்தியமில்லை என்பதை அமெரிக்க வாழ் நண்பர்கள் அறிவார்கள் . இந்தியா இதற்கு முற்றிலும் எதிரான ஒரு புள்ளியில் நிற்பது , நாம் சாலைகளை மையமாக்கிய சமூகம் . ‘You build the roads , they will come’ என்பார்கள் இது இந்தியாவுக்கு கச்சிதமாக பொருந்தும்.
எங்கெல்லாம் சாலை வசதி வருகிறதோ அங்கு அதை ஒட்டி உடனே புதிய குடியிருப்புகளும் , பேருந்து வசதியும் , சாலையோர கடைகளும் , உணவகங்களும் , பிற வணிக கட்டிடங்களும் முளைக்க ஆரம்பித்து விடும் . வரப்போரம் செடிகள் செழிப்புடன் இருப்பது போலதான் இதுவும் .
வளர்ந்த நாடுகளிலேயே மிக அதிகமான மக்கள் அடர்த்தி கொண்ட நாடு ஜப்பான். அதை விடவும் அதிகம் மக்கள் தொகை அடர்த்தி உள்ள நாடு இந்தியா , நம் மக்கள் தொகை ஓரளவு பரவலாக நாடு முழுதும் பரவி இருப்பதால் நமக்கு சட்டென அதை உணர முடிவதில்லை . இவ்வளவு அதிக மக்கள் தொகையும் மக்கள் அடர்த்தியும் கொண்ட ஒரு வளரும் நாட்டுக்கு ‘இறுதி மைல்’ பொது போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்று தனியாக விளக்க தேவை இல்லை என்று நினைக்கிறேன் .
எனவே உலகிலேயே எந்த நாட்டை விடவும் இந்தியாவில் பொது போக்குவரத்தை விரிவாக்கவும் மேம்படுத்தவும் வலுவான காரணங்கள் உள்ளன . இது மக்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் விஷயம் அல்ல இது அரசாங்கங்களுக்கு வருமானத்தையும் , பொருளாதார மேம்பாட்டையும் , வளர்ச்சியையும் வருமானத்தையும் அளிக்கும் விஷயமும் கூட.
***
தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்துக்கு உகந்த சாலைகளின் மொத்த நீளம் 2 லட்சம் கிலோமீட்டருக்கு மேல் வரும் . அரசு பேருந்துகள் மட்டுமே தினப்படி 20 ஆயிரத்துக்கு மேல் ஓடுகின்றன இவை ஒட்டு மொத்தமாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி கிலோ மீட்டர் தூரத்தை தமது சேவையால் அடைகின்றன .எவ்வளவு பெரிய வலைப்பின்னல் இது !
பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது இந்த வலைப்பின்னலை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த செய்யப்படும் முதலீடு என்றே சொல்லலாம் . குறிப்பாக இதை தமிழக அரசு முன்னெடுப்பதால் நல்ல திட்டம் என்று சொல்லவில்லை – ஏற்கனவே பஞ்சாப் அரசு இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது – இதை எந்த, அரசு எந்த மாநிலத்தில் செய்தாலும் அது வரவேற்கத்தக்கதே.
ஏன் ?
சமகாலத்தில் இந்தியா உலகிலேயே மிக அதிகம் இளைய வயதினரை ( 18 – 35 yrs ) கொண்ட ஒரு நாடாக திகழ்கிறது . அதாவது வேலைத்திறனுள்ள வேலைக்கு போக ஆர்வமுள்ளவர்கள் . இதை demographic divident என்பார்கள் . அடுத்த 25-30 ஆண்டுகள் மனிதவள நோக்கில் இந்தியாவின் பொற்காலமாக இருக்கும் அதன் பின் வேலை செய்யக்கூடிய மக்களின் சத்விகிதம் குறையத் தொடங்கும் . இந்த முப்பது ஆண்டுகளில் நாம் வளர்ந்தால் தான் உண்டு இல்லையென்றால் அதற்குள் ஆப்பிரிக்கா நாடுகள் இந்த இடத்துக்கு போட்டி போட ஆரம்பித்து விடும் .
இப்படி வேலை செய்யும் திறனுள்ள பெரும் கூட்டத்தில் சரிபாதி பெண்கள் என்பதையும் நாம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் . மேலும் அதிகரித்து வரும் பெண் கல்வி குறைந்து கொண்டே வரும் fertility rate போன்றவை பெண்கள் வேறெப்போதையும் விட வேலைக்கு செல்ல சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது . தற்போது இந்திய workforce ல் இருபது சதமே பெண்கள் உள்ளனர் . சீனாவில் இது எண்ணிக்கை 60% க்கும் மேல்.சீனா அளவுக்கு போகாவிட்டாலும் கூட இதை 30-35 % என்று ஆக்கினாலே அது பெரும் நேர்மறை பாதிப்பை உண்டாக்கும் .
வேலைக்கு செல்லவோ படிக்க போகவோ இந்தியாவில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் ஆண்களை விட மிக அதிகம். பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்னும் இந்த திட்டம் அந்த தடைகளில் ஒன்றை தாழ்த்தியிருக்கிறது எனலாம் . மேலோட்டமாக இலவச பயணம் தானே என்று தோன்றினாலும் இது உண்டாக்கமுடியும் மாற்றம் பல தளங்களில் விரியக்கூடியது .
முதலில் இது ஒரு psychological barrier ஐ நீக்குகிறது . பயணம் என்பது முதலில் கையில் காசிருக்க வேண்டும் , அல்லது வேறு ஒருவரை எதிர்பார்த்து நிற்க வேண்டும், அதற்கு மாதா மாதம் ஒரு பட்ஜெட் போட வேண்டும் , தனியாக போக தயக்கம் என்றெல்லாம் . இதை விட முக்கியமாக அரசு நமக்கு உதவ நினைக்கிறது என்ற எண்ணம் அளிக்கும் ஊக்கம் அபாரமானது .
மனிதவள நோக்கில் இது கூடுதலான வேலையாட்களை work pool க்கு அளிக்கும் , work force இன்னும் கொஞ்சம் சரளமான ஊர் விட்டு ஊர் நகரமுடியும் . இந்த ஊரில் வேலை இல்லை என்றால் இன்னொரு ஊருக்கு டிக்கெட் செலவளித்து போக வேண்டுமா என்ற கவலைகள் எல்லாம் வராது . ஊர் விட்டு ஊர் போய் வேலைக்காக தங்குவது குறையும் . தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இன்னும் predictable ஆக இருக்கும் .இது போன்ற fluid workforce அமையும் என்றால் புதிய தொழில் தொடங்க நினைக்கும் நிறுவனங்கள் தமிழகத்தை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டும் .
பெண்கள் அதிகம் வேலைக்கு செல்வது , குடும்ப வருமானத்தில் சேமிப்பை அதிகப்படுத்தும் , பெண்கள் சம்பாதிப்பதில் கணிசமான அளவு குடும்ப செலவுக்கு போகுமே ஒழிய டாஸ்மார்க் கல்லாவுக்கு போகாது . சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள குடும்பங்களில் வருவாய் அதிகரிக்க ஆரம்பித்தால் ( சொற்பமாக இருந்தால் கூட ) அது மீண்டும் பணப்புழக்கமா பொருளாதாரத்துக்கு வரும் .அவர்கள் செலவளிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் , சேவைக்கும் , ஒரு பங்கு அரசு கஜானாவுக்கு மறைமுக வரியாக போகும் ( GST ! ) . இது சங்கிலித்தொடர் போன்ற ஒரு நிகழ்வை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் .
எனவே இப்படி இலவச பயணத்தின் மூலம் அரசுக்கு ஆயிரம் அல்லது ரெண்டாயிரம் கோடி வருமான இழப்பு என்றால் அதை போல இரண்டு அல்லது மூன்று மடங்கு அரசுக்குக்கும் பொருளாதாரத்துக்கும் மீண்டும் வந்து சேரும் , நேரடியாகவோ மறைமுகமாகவோ . இது சற்றே மாற்றி வடிவமைக்கப்பட்ட அழகான keynesian model.
முக்கியமான எல்லா திட்டங்களையும் போல இதையெல்லாம் பேப்பரில் எழுதி அறிக்கையாக வெளியிடுவது எளிது . நடைமுறையில் இது எவ்வாறு வெற்றிகரமாக அமல்படுத்தப்படுகிறது என்பதில் தான் அனைத்தும் உள்ளது. தேவையான அளவு பேருந்துகள் , குறித்த நேரத்தில் சேவை , கவரேஜ் , பாதுகாப்பான பயணம் என்று பல விஷயங்களை உள்ளடக்கியது இது .
மேலும் இது நல்லபடியாக நடந்தால் இது மக்கள் மனதில் குறிப்பாக பெண்கள் மனதில் உருவாக்கும் நேர்மறை எண்ணம் மிக முக்கியமான political capital ஆக மாறும் .இது ஒன்றும் ரகசிய திட்டமோ , கடினமான திட்டமோ கிடையாது எந்த ஒரு மாநில அரசும் மனது வைத்தால் செய்யக்கூடியதே ஆனால் do they have the political will என்பதே இங்குள்ள கேள்வி .
சமூக அளவிலும் இது ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டுவர வல்லது . பெண்களை மேலும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் , சமூக தொடர்பும், நாட்டு நடப்பும் அறிந்தவர்களாகவும் இது விரிவடையச்செய்யும் . இந்த சமயத்தில் காந்தி பெண் கல்வி குறித்து சொன்னது ஞாபகம் வருகிறது . கல்வி அல்லது வேலை என்று மட்டும் இல்லை இது போன்ற திட்டங்கள் பெண்களின் சமூக பங்களிப்பையும் (empowerment ) பல தளங்களுக்கு எடுத்துச்செல்லும் முடியும்.
Leave a Reply