
சமீபத்தில் கொரோனா வாக்சின் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தம் பட்டிருக்கிறார் என்று ஒரு சதிச்செய்தி ( conspiracy ) இணையத்தில் உலாவியபடி இருந்தது , அதை நண்பர்கள் வட்டத்திலே சிலர் நம்பவும் செய்தார்கள் . அப்போதே பில் கேட்ஸ் பெளண்டேஷன் குறித்து எழுத எண்ணியிருந்தேன் . எழுதியிருக்க வேண்டும் , இப்பொது ஒரு வருத்தமான சூழலில் அதை எழுதவேண்டியதாகிப் போனது.
இன்று பில் கேட்ஸும் மெலிண்டா கேட்ஸும் மணமுறிவு பெறுகிறார்கள் என்ற செய்தி வந்த பொழுது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது இதுவரை இவர்களிடையே பெரிய முரண்களோ ஒவ்வாமைகளோ இருந்ததாக தெரியவில்லை . சொல்லப்போனால் பிரிவதற்கான பெரிய முகாந்திரங்கள் ஏதுமற்ற தம்பதியினர் என்று தான் இதுவரை எண்ணி வந்திருக்கிறேன் .
பில் கேட்ஸ் உலகிலேயே பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்று நமக்கு தெரியும் ஆனால் அதை விடவும் முக்கியமானது அவர் உலகிலேயே பெரிய கொடையாளி என்பது தான் . அவரும் அவர் மனைவியும் சேர்ந்து உருவாக்கிய ‘பில் & பெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளையின் சார்பில் வருடம் ஒன்றுக்கு சராசரி 5 பில்லியன் டாலர் என்று இது வரை 55 பில்லியன் டாலர் பக்கம் கொடையளித்துள்ளார்கள் . இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட நாலு லட்சம் கோடிகள் !
இவ்வளவு பெரிய தொகையை கொடையளிப்பது ஒரு அரிய செயல் என்றாலும் கணவனும் மனைவியும் இணைந்து இவ்வாறு மனமொத்து கொடையளிப்பது என்பது இன்னுமே அரிது . இந்த கொடைகளையும் ஏனோ தானோ என்று வாரி இறைப்பதில்லை. எந்த விஷயங்களுக்கு இந்த பணத்தை செலவிடுவது அதிகம் பயனுள்ளதாக இருக்கும் , யாருக்கு இதன் தேவை அதிகமாக இருக்கும் , எந்த இடத்தில் உதவி அதிகம் தேவைப்படும் என்று அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து அறிந்து , தக்க தகவல்களையும் அறிக்கைகளையும் அடிப்படையாக கொண்டே இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன . சும்மா இடது கையில் தூக்கி கொடுத்துவிடுவதில்லை அது சரியான இடத்துக்கு சென்று சேர்கிறதா என்று பொறுப்புடன் செயல்பட்டு உறுதுசெய்துகொள்கிறார்கள்.
அதே போல உலகத்தின் பல்வேறு அரசாங்கங்கள் , அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து இயங்கவும் , தேவையான நிபுணர்களை கண்டறியவும் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் (நேர்மறை பொருளில் ) இயங்கும் முறையில் நடத்தப்படும் அறக்கட்டளை இது . சக கொடையாளர்கள் , அரசு திட்டம் வகுப்பவர்கள் , லாப நோக்கற்ற நிறுவனங்கள் , நிபுணர்கள் என்று விரிவான ஒரு philanthropy வலைப்பின்னலை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.
பெர்க்ஷையரின் நிறுவனரும் பில் கேட்ஸின் நீண்ட கால நெருங்கிய நண்பருமான வாரன் பஃப்பட் தன் மறைவுக்கு பிறகு தன் சொத்துக்கள் அனைத்தையும் பில் கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளைக்கே அளிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். Big philanthropy என்பதை சிஸ்டமேடிக்காக அடுத்த கட்டத்தத்துக்கு எடுத்து சென்றவர்களாக கேட்ஸ் தம்பதியினரை குறிப்பிடலாம் . அத்தகையை இருவர் மண வாழ்வை விடுத்து பிரிய நேர்கிறது என்பதை கேட்க வருத்தம் ஏற்பட்டது
பில் கேட்ஸிடம் எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று அவரின் நிலத்தில் காலூன்றி நிற்கும் தன்மை . அவரின் அடுத்த நூறு தலைமுறைகளும் உட்கார்ந்து அனுபவிக்கலாம் என்னும் அளவு சொத்துக்கள் இருந்தும் கூட அவரது குழந்தைகளுக்கு என்று சேர்த்து வைக்காமல் அதை தேவையுள்ள மக்களுக்கு என்று அளிக்க முடிவெடுத்தவர் . பில் கேட்ஸுக்கு மூன்று குழந்தைகள் என்பதே அவ்வளவாக யாருக்கும் தெரியாது , அறிதாகவே யாராவது பார்த்திருப்பார்கள்
அவர்கள் பெரும்பாலான பில்லியனர் குழந்தைகளை போல உல்லாச கப்பல்களிலே கொண்டாடி களித்தபடியோ , விலையுயர்ந்த கார்களில் ஊரைச்சுற்றியபடியோ இருக்கும் காட்சிகளை நாம் பார்த்திருக்கமாட்டோம் . இவ்வளவு சொத்து இருந்தும் குழந்தைகளை சராசரி குழந்தைகளை போல வளர்த்திருப்பதும் எளிய விஷயமில்லை
பெலிண்டாவும் கொடையளிப்பதில் சளைத்தவர் அல்ல . இவ்விருவரும் மண வாழ்வில் பிரிவதாக ஒப்புக்கொண்டிருந்தாலும் அறக்கட்டளையில் பெரிய மாற்றங்களை கொண்டு வராமல் தொடர்ந்து எப்போதும் போல இயங்க விருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .பில் கேட்ஸுக்கும் பெலிண்டா கேட்ஸுக்கு – அவர்கள் தொடர்ந்து இந்த philanthropy செயல்களில் ஈடுபடவும் , அவர்களின் பிரிவு சுமூகமாகவும் நன்னம்பிக்கை கொண்டதாகவும் அமைய வாழ்த்துக்கள்.
Leave a Reply