
Egalitarians அமைப்பின் சார்பாக அம்பேத்கர் குறித்து ஜெ ஆற்றியிருக்கும் இந்த உரை முக்கியமானது . பெரும் ஆளுமைகளை நாம் பொதுவாக ஒருவாறு சுருக்கி திரட்டி வலுவான ஒற்றை அடையாளமாக ஆக்கிக்கொள்வது இயல்புதான் . காந்தி என்றால் அகிம்சை , போஸ் என்றால் வீரம் என்பது போல .
ஒருவர் முக்கியமாக எதற்காக நின்றார் ,எதில் சிறந்து விளங்கினார் , எதற்காக பாடுபட்டார் எவ்விதம் வெளிப்பட்டார் என்பது ஒரு ஒற்றை அடையாளமாக இருக்கும்போது தான் அதன் மூலம் பெரும் திரளாக மக்களை அடையவும் அவர்களை திரட்டவும் முடியும் . அந்த ஆளுமைகள் கொள்ளும் விசையும் வீரியமும் இவ்வாறு மக்கள் மனதில் அடையாளங்களாக பதிவதன் மூலமாகவே உருவாகிறது . ஆனால் ஆளுமைகள் ஒற்றைப்படையானாவர்கள் அல்ல .
இவ்வாறு ஒற்றை அடையாளமாக திரண்டு வருதலுக்கு இணையாகவே அவர்களின் மீதான முழுமைப் பார்வையும் அறிவுத்தளத்தில் அவசியமாகிறது . அவர்கள் முன்வைத்த சிந்தனை , பார்வை கோணங்கள் போன்றவற்றை அவர்கள் விட்ட இடத்தில் இருந்து முன்னெடுத்துச்செல்ல இந்த முழுமைப்பார்வை அவசியம் ஆகிறது . அந்த கோணத்தில் அம்பேத்கர் அவர்களை முழுமையாக வரையறை செய்யும் உரை இது .
ஓரளவு கல்லூரி விரிவுரைகளை ஒத்த ஆனால் சுவாரசியமான கட்டுக்கோப்பான உரை . மிக விரிவாக தொன்மங்களில் ஆரம்பித்து , வரலாறு , வரலாற்றின் வகைகள் , வரலாற்று எழுத்தின் வகைகள் (Historiograhy ) என்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த வெவ்வேறு வரலாற்று பார்வைகளை ஆராய்கிறது . அந்த வரலாற்று பார்வைகளில் உள்ள போதாமைகளை, விடுபடுதல்களை பேசுகிறது.
இதில் அம்பேத்கர் முன் வைக்கும் வரலாற்று பார்வை கோணம் எவ்வாறு Historic Positivism என்பதை ஒத்திருக்கிறது என்பதை நோக்கி உரை செல்கிறது. இது வரை புழக்கத்தில் இருந்த வரலாற்று பார்வைகளை எல்லாமே ஏதோ ஒரு வகையில் தலித்துகளை வெளியே வைத்துவிட்டே தான் பேசியிருக்கின்றன. தொன்னூறுகளில் உருவாகிவந்த sub altern வகை வரலாற்று கோணம் கூட தலித் என்னும் அடையாளத்தை விளிம்பு நிலை என்னும் அடையாளத்தோடு சேர்த்தே பேசி வந்திருக்கிறது
தலித் வரலாறு விளிம்பு நிலை வரலாறு அல்ல அவர்கள் எக்காலத்திலும் சமூகத்துக்கு வெளியே நின்றவர்கள் அல்ல , மாறாக ஒட்டு மொத்த சமூகமே அவர்களின் மேல் தான் அமர்ந்திருக்கிறது என்னும் பார்வை முக்கியமானது . அம்பேத்கர் பயன்படுத்தும் depressed class என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த உரை அடிக்கோடிடுகிறது .
அம்பேத்கரின் வரலாற்று முடிவுகளின் இருக்கும் போதாமைகள் குறித்த நியாயமான விளக்கங்களை முன் வைக்கிறது . அவர் பார்வையில் துலங்கி வரும் அற நோக்கை (ethics ) முக்கியத்துவப்படுத்துகிறது . அம்பேத்கர் பெளத்தத்தை தழுவியது சனாதன எதிர்ப்பு மட்டுமல்ல அது அவரின் ஆன்மீக புரிதலையும் உள்ளடக்கியது .(அம்பேத்கரின் “தம்மம்” குறித்து ஜெ ஏற்கனவே முக்கியமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார் . )
இறுதியாக அம்பேத்கரின் முக்கிய வரலாற்று தத்துவ பார்வைகளான Historic positivisim , non-sentimentalism , peoples history , objective view of myths போன்றவைகளை உள்ளடக்கிய, பெருமிதங்கள் அற்ற ஒரு புதிய வரலாற்று பார்வையை எப்படி உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற ஒரு blueprint ஐ அளிக்கிறது.
ஜெ “இன்றைய காந்தி” தொடரை எழுதியபோதே அவர் அதே போன்று அம்பேத்கர் குறித்தும் எழுதினால் நன்றாக இருக்கும்என்று நினைத்தேன் அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் இந்த உரை அமைந்திருக்கிறது. இப்படி வால்டேரில் இருந்து நொபுருகராஷிமா வரை , தொன்மங்களில் இருந்து மனித ஆன்மீக பரிணாமம் வரை ( ரஜினியோ மதங்களோ பேசும் ஆன்மீகம் அல்லஇது ) ஒரு கோட்டை இழுக்கும் பிரிதொரு உரை கேட்கக்கிடைப்பது அரிது .
காந்திய நோக்கும் அம்பேத்கரிய நோக்கும் அவர்கள் காலத்தில் நடைமுறை சார்ந்த சில முரண்களை கொண்டிருந்தாலும் அதன் அற அடிப்படையில் ரொம்பவும் வேறானதல்ல என்பதை உணரமுடிகிறது . தனிப்பட்ட முறையில் இந்த புள்ளியில் இருந்து இந்தியா என்பது குறித்த ஒரு புதிய நவீன integrated & inclusive view வை உருவாக்க தேவையான இணைவுகளை இந்த உரை அளிப்பதாக உணர்கிறேன் .
Leave a Reply