
இன்று (ஏப்ரல் 25 ) ஆஸியில் ‘ANZAC Day ‘ எனப்படும் போரில் மாய்ந்த வீரர்களை நினைவுகூறும் தினமாக கொண்டாடப்படுகிறது . உலக வரைபடத்தில் ,ஆஸி, ஒரு மூலையில் சிவனே என்று இருக்கும் நாடு ,நேரடியாக எந்த வம்புதும்புக்கும் போனதில்லை ஆனால் இது வரை உலகெங்கும் நிகழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு தன் வீரர்களை இழந்துள்ளது .
இந்தப் போர்களில் எதுவுமே ஆஸி மண்ணில் நேரடியாக நிகழ்ந்ததில்லை . ஆஸியும் நேரடியாக யாருடனும் போரிட வேண்டியது வந்ததில்லை . ஆனால் உலகெமெங்கிலும் நடந்த போர்களில் மொத்தம் இது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆஸி வீரர்கள் மாண்டுள்ளனர். இந்தப் போர்கள் எல்லாமே இங்கிலாந்துக்காகவோ அல்லது அமெரிக்காவுக்காகவோ ஆஸி கலந்து கொண்ட போர்கள் . சர்வதேச புவி அரசியலில் ( Geopolitics ) ஆஸியின் இடம் சிக்கலானது.
ஆஸி ஒரு தனித்தீவு , அப்படியே புவியியல் நோக்கில் பக்கத்து வீடு யார் என்று பார்த்தால் எல்லாம் ஆசிய நாடுகள் தான் – இந்தோனேசியா , மலேசியா , சீனா , இந்தியா என்று . ஆனால் ஆஸியின் அரசியல் மற்றும் பண்பாடு சார் அடையாளமும் இணக்கமும் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிலைப்பாட்டையே ஒட்டி அமைந்திருக்கும் . இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு .
ஆஸி பிரிட்டிஷ் காலனியாக ஆரம்பித்த நாள் முதல் அது எல்லா வித தொடர்புகளையும் ஜரோப்பிய நாடுகளுடனேயே அதிகம் கொண்டிருந்தது . மேலும் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது இங்கு குடிபுகுந்த ஐரோப்பியர்களும் இந்த தொடர்பை இன்னும் ஆழமாக்கினார்கள்.அமெரிக்கா பதிலுக்கு ஆஸிக்கு ராணுவ பாதிகாப்பை அளிப்பேன் என்ற உறுதியை அளிக்கிறது .
எழுபதுகள் வரை ஆஸி தன்னை ஒரு ஆங்கிலோ சாக்ஸன் நாடாகவே அடையாளப்படுத்திக்கொண்டது (இன்னுமே அப்படித்தான் ) , அது வரை ‘Whites Australia’ என்ற வெள்ளையர் மட்டுமே ஆஸியில் குடியேற முடியும் முறை அமலில் இருந்தது . 1973 ல் இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் தான் ஆசியர்கள் மெல்ல குடியேற தொடங்கினார்கள் . இன்றும் கூட கல்லூரி முடிந்து வெளிவரும் பல மாணவர்களிடையே ஜரோப்பிய பயணம் என்பது கிட்டத்தட்ட ஒரு வயதுக்கு வரும் சடங்கைப் போல பார்க்கப்படுகிறது .
இன்னொரு சமயம் விரிவாக இது குறித்து எழுத வேண்டும் . ஆனால் இன்று நிகழ்ந்த நனைவுகூர்தலை குறித்து நான் கண்ட ஒரு புகைப்படம் மனதை தொட்டது.
இந்த நினைவுகூர்தல் நகரங்களில் அதற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நினைவிடங்களில் ராணுவ மரியாதையுடன் மிகச் சிறப்பாக நடக்கும் என்றாலும் அந்தந்த ஊர்களில் இருந்து போருக்கு சென்ற வீரர்களுக்காக அந்தந்த ஊர்களிலேயே சிறு மணிமண்டபமோ நினைவுத்தூணோ இருக்கும் . அங்கே வாழும் மக்கள் அவரவர் கூடி தனியே இந்த நினைவுகூர்தல் சடங்கை நிகழ்த்துவார்கள் .
இந்தப் புகைப்படத்தில் இருப்பது அவ்வாறு வெகு சில மக்களே வசிக்கும் ஒரு அழகிய – விடுமுறையை கழிக்க தோதான -ஒரு சிறு remote community . அங்கிருந்து போருக்கு கிளம்பிச் சென்ற வீர்ர்களை நினைவுகூறும் கைகளால் செய்யப்பட்ட ஒரு சிறு அடையாளச் சின்னம் .அவ்வாறு போர்களில் கலந்துக்கொண்டோரில் இன்னும் எஞ்சி இருப்பவர்களில் ஒருவரான டாம் ஸ்டிரேஞ்சும் , அவருக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களுடம் காட்சியளிக்கிறார்.
இதுவரை ஒரு போர் கூட நிகழாத இந்த மண்ணில் இருந்து சென்ற ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீரர்கள் களத்தில் மரணித்திருக்கிறார்கள் . பக்கத்து ஊரை அடைகூட வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் இந்த ஊரில் இருந்து சென்ற 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் உலகின் பல்வேறு இடங்களில் யாருக்காவோ வேறு யாரையோ எதிர்த்து போரிட்டு மடிந்திருக்கிறார்கள் .
இதை எழுதும் போதும் கூட அப்கானிஸ்தானிலும் , ஈராக்கிலும் , சூடானிலும் , எகிப்திலும் பல்வேறு சிறு மோதல்களில் ஆஸி வீரர்கள் ஈடுபட்டபடிதான் இருக்கிறார்கள் . அதிகார மோதல்களும் , மீறல்களும் எங்கு நிகழ்ந்தாலும் அதன் தாக்கம் உலகெங்கும் எதிரொலிக்கும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.People now are more aware , more questioing and demanding.
#ANZACDay2021 #LittleGarieBeach #25April2021
Leave a Reply