
தற்போது ஆஸி தேசிய தடகளப்போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன . ஆஸி யில் விளையாட்டு என்பதற்கு எப்போதுமே சமூகத்தில் ஒரு தனி முக்கியத்துவம் உண்டு . தனிப்பட்ட ஒரு விளையாட்டு என்று கிடையாது . தடகளப் போட்டிகள் , குழு விளையாட்டுகள் , நீச்சல் ,சைக்கிளிங் என்று எந்த விளையாட்டை எடுத்தாலும் ஒரு குறைந்த பட்ச தரம் இருக்கும் .
இந்த வருடம் ஒலிம்பிக் தேர்வு வருடமானதால் தேசியப் போட்டிகள் இன்னுமே கவனம் பெற்றன .இதில் வெற்றி பெறுபவர்கள் பலர் அதன் அடிப்படையிலேயே ஒலிம்பிக் அணிக்கு தேர்வாகிவிடுவார்கள் . இந்த போட்டியில் பல நம்பிக்கையளிக்கும் திறமைகளை காண முடிந்தது . தனிப்பட்ட முறையில் எனக்கு பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் முதன்முறையாக 2 மீட்டர் தாண்டி நிக்கோலா மெக்டெர்மாட் ஆஸி சாதனை புரிந்தது மகிழ்ச்சியை அளித்தது .
உயரம் தாண்டுதல் எனக்கு பிடித்தமான தடகள விளையாட்டுகளில் ஒன்று . இது நம்மோடு நாமே போட்டிபோடும் விளையாட்டு.பள்ளி காலங்களில் இருந்தே எனக்கு இந்த விளையாட்டின் பால் இயல்பான ஆர்வம் உண்டு. வார இறுதி நாட்களில் கூட பள்ளி மைதானத்துக்குப் போய் தனியே பயிற்சி செய்திருக்கிறேன் . பள்ளியிலும் கல்லூரியிலும் போட்டிகளில் வென்றிருக்கிறேன் .
உயரம் தாண்டுதல் கலவையான திறமைகளை கோருவது . வில் வித்தை போட்டிகளை ஒத்த ஒருமுகப்படுத்தல் தேவைப்படும் . ஒட்டுமொத்த தாண்டுதலையும் ஒவ்வொரு அடியாக மனதில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்க வேண்டும் . பல தோல்வியடைந்த தாண்டுதல்களை பார்த்தால் உண்மையில் உயரமாகவே தாண்டியிருப்பார்கள் ஆனால் உடலின் ஏதோ ஒரு பகுதி அந்த flow உடம் சேராமல் துருத்திக்கொண்டு crossbar ஐ தொட்டுவிட்டிருக்கும் .
வெற்றிகரமான தாண்டுதல் என்பது வேகம் , அதைவிட முக்கியமாக கச்சிதமான தூரத்தில் ரிதமிக்காக எண்ணி வைக்கப்படும் அடிகள் , தாண்டுதலை அணுகும் கோணம் என்று பல விஷயங்களை சார்ந்தது . இதெல்லாம் இடது காலை துல்லியமாக உந்தி மேலே எழும் வரை தான். அதன் பின் அது காற்றில் நிகழும் ஒரு நடனம் . அதுவரை வேகமும் கச்சிதமும் கொண்டு நகரும் உடலை அதன் பின் மொத்தமாக தளர்த்திக்கொண்டு கேனில் இருந்து ஊற்றப்படும் கடலை எண்ணெய் போல மொத்த உடலும் இளக்கி ஊற்றி, ஒரு துளி சிதறாமல் கம்பிக்கு அப்பால் இறக்க வேண்டும் .
சிறப்பான ஜம்ப என்றால் கம்பியின் மறுபுறம் உள்ள மெத்தையில் கொஞ்சமும் தளும்பாமல் இறங்குவார்கள் . நான் பள்ளிக் காலங்களில் குதிக்கும் போதெல்லாம் எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது scissor jump தான் , பக்கவாட்டில் ஓடிவந்து ஒரு காலால் முதலில் தாண்டி பின் இன்னொரு காலை லாவகமாக உள்ளிழுத்துக்கொள்வது. அப்போதெல்லாம் high jump pit கள் எல்லாம் குவித்து வைக்கப்பட்ட மணல் தான் குதித்த பின் முதலில் காலில் தான் லேண்ட் ஆக வேண்டும் இல்லையென்றால் அடிபடும் . அடிபட்டுவிடக்கூடாது என்னும் பயம் மனதில் இருந்துகொண்டே இருக்கும் .
கல்லூரியில் கூட அப்படித்தான் மணல் கொட்டி வைத்திருப்பார்கள் . போட்டிகளில் போது மட்டும் மணலை நன்றாக சலித்து விட்டு இறுகிப்போகாமல் இருக்கும்படி குவித்து வைத்திருப்பார்கள் . இப்போது எப்படியோ தெரியவில்லை . இதே போல இன்னொரு டெக்னி straddle என்பது , அதாவது குதிரையில் பாய்ந்து ஏறுவது போன்றது . இதிலும் நாம் எங்கே எவ்வாறு லேண்ட ஆகப் போகிறோம் என்பது நம் பார்வையிலேயே இருக்கும் .
சர்வதேச அளவில் இந்த foam அடைத்த மெத்தைகள் பரவலாக புழக்கத்துக்கு வந்தபின் குதிக்கும் நுட்பமே முற்றாக மாறியது . அதன் பின் காலில் தான் லேண்ட் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய்விட்டது , அடிபடுமோ என்ற தயக்கம் முற்றிலும் இல்லாமல் ஆனது.
தற்போது நாம் பரவலாக காணும் தலை முதலில் லேண்ட் ஆகும் Fosbury Flop அப்போது உருவானதுதான். இப்போது கிட்டத்தட்ட இது defacto டெக்னிக் ஆகிவிட்டது . இந்த டெக்னிக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த ஒரு தருணத்திலும் நம் உடலின் centre of gravity , கிராஸ் பாருக்கு கீழே தான் இருக்கும் .மேலும் உயரம் தாண்டுவதை இது சாத்தியமாக்கியது . இதிலும் கூட சில வீரர்கள் தனிப்பட்ட ஸ்டைல் வைத்துள்ளார்கள், தங்கள் உடல் வாகுக்கு ஒத்துவரும் படி . நீளமான கால் உள்ளவர்கள் டெக்னிக் மற்றவர்கள் டெக்னிக்கில் இருந்து சிறிது மாறுபடும் .
இந்த டெக்னிக்கை உருவாக்கிய ஃபாஸ்பரி ஒரு பொறியியல் மாணவர் , அவரால் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் குதிக்க முடியாமல் போனபோது , இறுதி முயற்சியாக தன் பொறியியல் அறிவை பயன்படுத்தி இந்த முறையை கண்டடைந்தார் . மெக்ஸிகோ ஒலிம்பிக்ஸில் இந்த தாண்டும் முறையை பயன்படுத்தியே தங்கம் பதக்கம் வென்றார் . அதன் பின் அவர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளவே இல்லை.
#DickFosbury #HighJump #FosburyFlop
Leave a Reply